பக்கம் எண் :

964திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3625. சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
       தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி
     பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ
     வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி
     னீடுதவி மாணிகுழியே.                2


அள்ளல் வயல்வாய் - இளம் வள்ளைக் கொடிகள் (வரப்பின்மேல்)
படர்ந்த சேற்றையுடைய வயலில். கன்னி இளவாளை - மிக்க இளமை
பொருந்திய வாளைமீன்கள். குதிகொள்ள - துதித்துத் தாவும்படி.
இளமேதிகள் - இள எருமைகள். மன்னி - தங்கி. படிந்து - மூழ்கி.
மனைசேர் - வீட்டிற்குச் சேரும். உதவி மாணிகுழி - திருமாணி
குழியென்னும் பதியேயாம். இத்தலம் ‘உதவி’ என்னும் அடைமொழியோடு
இணைத்தே கூறப்படுகிறதன் காரணம் விசாரித்து அறியத்தக்கது.

     2. பொ-ரை: ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில்
உத்தூளணமாகப் பூசி, தோலை ஆடையாக அணிந்து, தெருக்களில்
பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி
வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து
வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம்
வீசுவதும், வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய
வயல்களையுடையதும், கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற
திருமாணிகுழி என்பதாம்.

     கு-ரை: சோதி மிகு - ஒளி மிகுந்த. நீறு அது - திருநீற்றை. மெய்பூசி
- திருமேனியில் உத்தூளித்து. ஒரு தோல் உடை புனைந்து - தோலை
ஆடையாக அணிந்து, தெருவே - தெருக்களில். மாதர் மனைதோறும் -
பெண்டிர் உள்ள ஒவ்வொரு வீட்டிலும். இசைபாடி - இசைப் பாடல்களைப்
பாடி. வசி - வயப்படுத்தும் பேச்சுக்களை பேசும். (அரனார் மகிழ்வு
இடமாவது) தாது மலி - மகரந்தப் பொடிகள் மிக்க, (தாமரை). மணம் கமழ
- மணம் வீச. வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கும். பழனம் மிக்கு -
வயல்கள் மிக்கு. ஓதம் மலி - ஓசை மிகுந்த. வேலை புடை சூழ் - கடல்
சூழ்ந்த, உலகில் - இவ்வுலகில், உதவி மாணிகுழியே -திருமாணிகுழியேயாம்.