பக்கம் எண் :

994திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

80. திருவீழிமிழலை

பதிக வரலாறு:

     தேம்பொழில் திருவீழிமிழலையில் மெய்ப்போதப்போது அமர்ந்தார் கோயிலை மேவிக் கைப்போது சென்னிமேற் கொண்டு கவுணியனார் பாடிய ஒப்பு ஓதரும் பதிகம் இது.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 338   பதிக எண்:80

 திருச்சிற்றம்பலம்

3657. சீர்மருவு தேசினொடு தேசமலி
       செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி
     னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல்
     சூழ்பழன நீடவருகே
கார்மருவு வெண்கனக மாளிகை
     கவின்பெருகு வீழிநகரே.
                1


    1. பொ-ரை: சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு, தேசங்களிலெல்லாம்
புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள்
வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
வெற்றிமிகும் பதியாவது, பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த
வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான, செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும்.

     கு-ரை: சீர்மருவு - சிறப்புப் பொருந்திய. தேசினொடு - சைவ
ஒளியோடு. தேசம்மலி - தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற. செல்வ மறையோர்
- (செல்வன் கழல் ஏத்தும்) செல்வத்தையுடைய அந்தணர்கள், பணிய.
தாழ்சடையினான் - தொங்கும் சடையை யுடையவனாகிய சிவபெருமான்.
அமர் - தங்கும். சயம்கொள் - வெற்றி கொண்ட. பதி - தலம். பார்மருவு -
பூமியிற் பொருந்திய. பங்கயம் - தாமரைமலர்கள். உயர்ந்த - உயர்வுற்ற.
வயல்சூழ் பழனம் - மருதம்.