பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)79. திருக்கோகரணம்993

     கு-ரை: கோடல் அரவீனும் - காந்தட்செடிகள் பாம்புபோல்
மலர்கின்ற. விரி - அகன்ற. சாரல் - மலைச்சாரல். முன் நெருங்கி - முன்
அணித்தாய் (தோன்ற) வளர் - வளம் பெருகும் கோகரணமே, ஈடம் ஆக
- இடமாக இனிது தங்குவான். அடிகள் பேணி - ஆராய்ந்த தமிழ்ச்
சொற்களால் இனிய இசைப்பாடல்களாகப்பாடிய. ஞானசம்பந்தன்
பாடல்களைப் பாட வல்ல பத்தர்கள், அதன் பயனாக எத்திசையும் ஆள்வர்
- (அரசராகி) எல்லாத் திசையும் ஆளுபவராவர். (பின்) பரலோகம் (உம்) -
மேலான முத்தியுலகமும். எளிதில் அடைத்தகுவது ஆகும். ஈடம் - நீட்டல்
விகாரம்.

திருஞானசம்பந்தர் புராணம்,

கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்
     குலவுதிருப் பருப்பகத்தின் கொள்கை பாடி
ஏற்றின்மிசை வருவார் இந்திரன்றன் நீல
     பருப்பதமும் பாடிமற் றிறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
     புகலியர்தம் பெருந்தகை யார்புனிதமாகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர்சூழ
     நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவுகின்றார்.

                              - சேக்கிழார்.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

                            - நம்பியாண்டார்நம்பி.