மால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடிகளைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த இளையவனான மார்க்கண்டேயன் பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவ பெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க. கு-ரை: தி.8 திருவாசகம் 3:- 50; 4:- 1-10; நான்முகன் அன்னப் புள்ளுருக்கொண்டு மேற்சென்று பறந்து தேடியலைந்து மேலும் அறிந்திலன். மாலும் பன்றியுருக்கொண்டு கீழிடந்து கீழும் அறிந்திலன். மேலும் என்றதால் கீழும் என வருவித்துரைக்கப்பட்டது. அயன் மேற்சென்று மேலும் அறிந்திலன். மால் கீழிடந்து கீழும் அறிந்திலன். மேல் கீழ் என்றன சிவபிரானுடைய திருமுடியையும் திருவடியையும் குறித்த இடவாகு பெயர். மேல்:- ‘போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே.’ ‘சோதி மணிமுடி சொல்லிற் சொல் இறந்து நின்ற தொன்மை,’ கீழ் - ‘பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்’. பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கு அப்பால்’. (தி.8 திருவாசகம். 164. 346) இடத்தல் - இடம்படச் செய்தல். தோண்டல்; ‘தங்கண்முன் இடக்குங்கை’ (தி.12 பெரிய. கண்ணப்ப. 183). இடந்து - இடம் படச்செய்து. மண்ணைத் தோண்டி; பெயர்த்து. மால் - அன்பு. ‘மாலுங்காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலங்காட்டி ஆண்டான்’ (தி.8 திருவாசகம். 643). உற்ற - மிக்க. தே - சிவபிரான். ‘தேவு - ‘சிவமாந்தன்மைப் பெருவாழ்வு’ (சித்தியார் கடவுள் வாழ்த்து, சிவ ஞானமாமுனிவர் உரை). தேவழிபாடு - சிவபூசை. பாலன் - மார்க்கண் டேய முனிவர். மிசை - மேல். பாசம் - கயிறு. மறிந்த சிந்தைக்காலன் - மடங்கிய சிந்தனையுடைய எமன். மறிதல்:- (திருவடியால் உதைபட்டு ஊக்கம் ஒழிந்து) மடங்குதல், அறிதற்கு அரியான் கழல் அடியே காலன் அறிந்தான்:- மாலும் அயனும் கீழிடந்தும் மேலுயர்ந்தும் அடியும் முடியும் அறிதற்கரியவனான சிவபெருமானது திருவடியால் உதைபட்ட முகத்தால், காலன் அதை அறிந்துய்ந்தான். (தி:-4 ப.100 பா.2, ப.107 பா.9, ப.98 பா.2) அக்காலனுக்குக் காட்சியளித்தது ‘அயன் திருமாற் கரிய சிவம்’. அவனை வீட்ட எடுத்தும் அவன் காணக் கிடைத்தது, நாரணனும் நான்முகனும் தேட எடுத்ததும், அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்ததும் ஆகிய திருப்பாதம். அத்திருவடியே என்றும் எங்கும் எவ்வுயிர்க்கும் துணை. அத்திருவடி வாழ்க. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் நான்காம் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது.
|