பக்கம் எண் :

20
 

இருந்திருக்கக கூடும் என்று தோன்றுகிறது. இத்தலத்திற்குத் திருவதிகை என்ற பெயர்வந்தமைக்குரிய காரணத்தைச் சிந்திக்க வேண்டுவது அவசியமாகும். அதிராஜன், அதி அரையன் என்ற பெயர்கள் இருப்பதைக்கொண்டு தகடூரைத் (தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவனும், அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்தவனும், கடைஎழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதியமானோடு இத்தலம் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதியமானின் ஆட்சி இத்திருவதிகை எல்லைவரை பரவியிருந்தது என்று ஒரு செவிவழிச் செய்தி கிடைக்கிறது. இதுகாரணமாக இத்தலம் இவன் பெயரால் அதிஅரையன் என்று இருந்துபின்னர் அதிகை என்று மருவி இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. திருவதிகை என்னும் இவ்வூர் பண்ணுருட்டி1 நகராட்சியின் கீழ் எல்லையில் அமைந்துள்ளது.

அட்டவீரட்டானம்:

வீரட்டானம் என்பது இறைவன் வீரத் திருவிளையாடல்கள் புரிந்த இடங்களைக் குறிப்பதாகும். அங்ஙனம் உள்ள தலங்கள் எட்டு, இத்தலங்களை,

பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம்அதிகை

மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்

காமன் குறுக்கை யமன்கட வூர்இந்தக் காசினியில்

தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே

-தனிப்பாடல்

என்னும் பாடல் குறிப்பிட்டு விளக்கும். இவற்றில் திரிபுரத்தை எரித்த வீரத் திருவிளையாடல் நிகழ்ந்த இடம் இத்தலமாகும். இதில், 1,300 ஆண்டுகட்கு முன்பு திருநாவுக்கரசர் இறைவனால்சூலை நோய்


1. இங்குப்பண்ணுருட்டி என்னும் ஊர்ப் பெயர் பற்றிய காரணத்தைச் சிந்திப்பதும் பொருத்தமாகும். ஆந்திர (தெலுங்கு) தேசத்தில் இருந்த ரெட்டியார்கள் பலர் வாழ்வு தேடித்தமிழகம் வந்தனர். அவர்களில் விவசாயத் தொழில் செய்யும் ரெட்டியார்கள் இங்கே குழுவாகத் தங்கி வாழத் தொடங்கினர். அத்தகைய ரெட்டிகள் பண்டரெட்டிஎனப் பெயர் பெற்றனர். பண்டரெட்டி என்றால் தெலுங்கில் விவசாயம் செய்யும் ரெட்டியார் என்று பொருள். அவர்கள் வாழ்ந்த இப்பகுதி பண்டரெட்டிஎனப் பெயர் பெற்று வழங்கி வந்தது. பின்னே அது பண்ரெட்டி எனத் திரிந்து மேலும் பண்ணுருட்டி எனத் திரியலாயிற்று. இப்பெயர் விளக்கம் பலருக்கும் தெரிந்திலது.