பக்கம் எண் :

21
 

தரப்பெற்று ஆட்கொள்ளப் பெற்றார் சூலைநோய் நீங்கும்பொருட்டு இத்தலத்தில் அவர் பாடியருளிய திருப்பதிகம் நான்காம் திருமுறையில் முதலில் இடம்பெற்றுள்ளது.

திருவதிகையில் முதல்பதிகம்:

திருநாவுக்கரசர், திருவாமூரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் அருந்தவமகவாக உதித்தார். இவரின் தமக்கையார் திலகவதியார். நாவரசர் நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமையினால் சமண சமயச் சார்புற்றார். திலகவதியாரின் திருக்கரத்தால் திருநீறு அளிக்கப் பெற்றுப்பெருவாழ்வு வந்தது என மகிழ்ந்தணிந்தார். தமக்கையாருடன் திருக்கோயில் வீரட்டானேசுரர் சந்நிதி சேர்ந்தார்.ஆண்டவன் உள் நின்று உணர்த்தப் பதிகம்பாடியருளினார். அப்பொழுது பாடியருளிய பதிகமே ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் பதிகமாகும். முதலில் இவர் பாடியருளிய பதிகம் இதுவே.

தேவாரம்:

இவர் பாடியருளிய 4, 5, 6-ஆம் திருமுறைகளைத் தேவாரம் என்பர். திருஞானசம்பந்தர் பாடியருளியதைத் ‘திருக்கடைக்காப்பு’ என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியதைத் ‘திருப்பாட்டு’ என்றும் குறிப்பது வழக்கம்.

10 பாடல்கள் பாடி 11 ஆவதுபாடலில் பாடல்களின் பயனையும், பாடியருளிய தன்னையும் குறித்துப் பாடும் அமைப்பிற்குத் திருக்கடைக்காப்பு என்று பெயர்.

தேவாரம் என்பது தேவு -ஆரம் எனப் பிரித்து தெய்வத்தின் மேல் பாமாலையாகச் சூட்டி மகிழத்தக்கது என்னும் பொருளையும், தே-வாரம் எனப் பிரித்துத் தெய்வத் தினிடத்து அன்பு செலுத்த உதவுவது - அன்பை விளைவிப்பது என்னும் பொருளையும் உடையது.

‘திருப்பாட்டு’ திருவை - அதாவது இறைவனை அடையத் தக்கநெறிகளைப் போதிக்கும் பாடல் என்னும் பொருளது.

இக்கருத்தில் ஞானசம்பந்தர் தன்னைப் பாடினார் என்றும், அப்பர் என்னைப் பாடினார் - அதாவது இறைவனைப் பாடினார் என்றும், சுந்தரர் பொன்னைப் பாடினார் என்றும் கூறுவர்.