இத்திருமுறையில்தான் யாப்பமைதிப் பாடல்களும், பண்கள் பொருந்திய பாடல்களும் உள்ளன. ஐந்தாம் திருமுறை-திருக்குறுந்தொகை, ஆறாம்திருமுறை-திருத்தாண்டகம், இவை இரண்டும் யாப்பு அமைதியுடன் உள்ளவை. கூற்றாயினவாறு - கூற்று: இம்முதல் பதிகம் கொல்லிப்பண்ணில் அமைந்தது என்பதை முன்னரே சிந்தித்தோம். இப்பண் இறைவனின் திருவுளத்திற்கு உகந்தது என்று அப்பர் குறிக்கின்றார். “கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டானரே” என்பது அத்தொடர். இப்பண்ணிலேயே இவர் தம் முதல் பதிகத்தைப் பாடியருளியது குறிக்கத்தக்கது. இப்பதிகத்தில் வரும், ‘கூற்றாயினவாறு’ என்பதற்கு இருபொருள் காணலாம். கூற்று என்பது உடலையும், உயிரையும் கூறுபடச் செய்கின்ற கூற்றுவனைக் குறிக்கும் சொல் என்று கொண்டு அவ் எமன் வந்து நலியவைக்கும் பொழுது ஏற்படும் துன்ப அளவுக்கு இப்பொழுது துன்புறுகின்றேன் என்பது ஒரு பொருள். அப்பர் பெருமான் திருக்கயிலையில் வாகீச முனிவராக விளங்கிய காலத்தில் இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட போது அவன் கயிலை மலையின் அடியில் இறைவன் அருளால் சிக்கிக்கொண்டு துன்புற்றான். அவன் நிலை கண்டுஇரங்கி, அவன் துன்பம் நீங்கித் தப்பிக்கும் வண்ணம் வாகீசமுனிவர் ‘இறைவன் சாமகானப்பிரியன்’ என்று கூறிவிடுகின்றார். உடனே இராவணன் தன் தலை ஒன்றையும், தன் கை நரம்பையும் கொண்டு யாழ் இசைத்துச் சாமகானம்பாடி இறையருளால் நாளும் வாளும் பெற்றுப் போயினான். இவ்விடத்தில் இறைவன் திருவுள்ளம் அறியாது வாகீசர் இராவணனுக்கு உதவியமையால், துட்டனுக்குத் துணைபோன குற்றத்திற்கு ஆளாக நேர்ந்துவிட்டது. அதனால் அவன் அநுபவிக்க வேண்டிய துன்பத்தை இவர் அநுபவிக்க நேர்ந்துவிட்டது. எனவே கயிலையில் நான் கூறிய ஒருகூற்று, இங்கு இவ்வண்ணம் ஆயினவாறு என்று கூறுவது பிறிதொருபொருள். கூற்று என்பதற்குச் ‘சொல்’ என்பது பொருள். ‘தலைவன் கூற்று’ ‘தலைவி கூற்று’ என்னும் அகஇலக்கிய நூல்களில் வருவது கொண்டு இதனை உணரலாம், கூற்றாயினவாறு இது; இதனை விலக்ககிலீர்;
|