கல்வெட்டு: இத்தலத்தைப்பற்றிய கல்வெட்டுக்கள் 29 உள்ளன. இவைகளும் முதற்பராந்தகன் காலமுதற்கொண்டே தொடங்குகின்றன. இவற்றால் அரசர்களும் அரசியர்களும், அவர்களது தோழிமார்களும் தண்டத் தலைவர்களும் விளக்கிற்காக நிலமும் நெய்யும் பொன்னும் வழங்கியமை அறியலாம். திரிபுவன வீரதேவனான மூன்றாம் குலோத்துங்கன் சிந்திநல்லூரில் உள்ள நிலங்களை 15500 காசுகளுக்கு விற்று, அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். இராஜராஜன் மூன்று காணி ஒரு முந்திரி நிலம் அளித்தான் என்பதால் அரசர்களின் அன்பின் நுணுக்கம் அறியப்பெறுகிறது. கோஇராஜகேசரிவர்மன் காலத்தில் ஒரு வேளாளன் கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்தான். 42. திருப்பாதிரிப்புலியூர் பாதிரி மரத்தைத் தலத்துக்குரிய மரமாகக் கொண்டமையாலும் புலிக்கால் முனிவரால்(வியாக்கிரபாதரால்) பூசிக்கப் பெற்றமையாலும் இது இப்பெயர்பெற்றது. திரு - அடை மொழி. இது திருப்பாதிரிப்புலியூர் என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கிறது. கடலூர் (புதுநகர்) என இவ்வூர் வழங்குகிறது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் கடலூர் வரப்பேருந்துகள் உள்ளன. இது நடுநாட்டுத்தலங்களுள் ஒன்றாகும். இறைவர் திருப்பெயர் தோன்றாத்துணைநாதர். “ திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே” என்ற இத்தலத்து முதற்பதிகத்திலுள்ள அப்பர் பெருமானின் திருவாக்கு இதற்குச் சான்றாகும். இறைவியார் திருப்பெயர் பெரிய நாயகி அம்மை. தலவிருட்சம் பாதிரி. இதை வடமொழியில்பாடலம் என்பர். தீர்த்தம் - கெடிலநதி. இது தென்திசைக் கங்கை என்று பாராட்டுப்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் பெருமானைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் தள்ள அப்பொழுது அவர் “சொற்றுணை வேதியன்”எனத் தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை ஓதிக் கரையேறப்பெற்றதால்
|