பக்கம் எண் :

264
 

திருப்பெயர் - மங்கையர்க்கரசி. பிள்ளையாரின் பெயர் - வேதப் பிள்ளையார்.

ஐயாறப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழூர்ப் பதிகளுள் இது நான்காவது ஆகும். இதற்கு ஞானசம்பந்தர்பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் பங்குனி 13s முதல் 15s முடிய இங்கே சூரிய பூசை நிகழ்கின்றது. இவ்வூரின்வளத்தை,

“தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே.”

(தி.3 ப.78 பா.1)

என்னும் சம்பந்தரது பதிக அடிகளால் அறியலாம்.

கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் கோஇராசகேசரிபன்மர், கோப்பரகேசரிபன்மர் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருவேதிகுடி மஹாதேவர். பரகேஸரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவற்றுள் பரகேஸரி சதுர்வேதிமங்கலத்து மஹாதேவர் என்னும் பெயர் கோப்பர கேஸரிபன்மரின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் காணப்படுகின்றது. இக்கல்வெட்டுக்கள் நுந்தாவிளக்குக்களுக்கு நிவந்தங்கள் அளித்ததைக் குறிப்பிடுவதோடு, இக்கோயிலுக்குத் திருப்பள்ளித்தாமம் பறித்துத் தொடுப்பார் இருவர், திருமெழுக்கிடுவார் நால்வர், காளமூதுவார் நால்வர் , நந்தவனக் குடிகள் மூவர் இருந்த செய்திகளையும் குறிப்பிடுகின்றன1.

கோராஜகேஸரி பன்மரின் 25 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஈராயிரத்து ஐந்நூற்று அறுபது குழி நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. (இது சிதைந்த கல்வெட்டு)


குறிப்பு : கோயில் புரப்பாரற்று மிகவும் சீரணமான நிலையில் கிடக்கின்றது.

1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1895 No 65-69. See also the South Indian Inscriptions, Vol. V No.622-626.