பக்கம் எண் :

301
 

பூசித்துச் சார்த்திய திருக்கதவு திறக்கப், பண்ணினேர் மொழியாளுமை பங்கரைப் பாடினார். சோணாடு, நடுநாடு, தொண்டைநாடு முதலியவற்றில் உள்ள பல சிவதலங்களைப் பணிந்தார். திருக்கயிலையை வணங்கப் பெருமுயற்சிகொண்டு பேரிடர்ப்பட்டார். பந்தணவும் மெல்விரலாள் பங்கன் திங்களணி செஞ்சடையன் அந்தணன் ஆகிப்போந்து, உரையாடி, பழுதிலாத் திருமேனியாக்கி, அழுதுருகிநிற்கும் ஐயரை ஐயாற்றிற் சென்று பொய்கையிற் கயிலையைக் காண்க என்று ஏவி, அவ்வாறே காட்டக்கண்டு களித்துப் பாடினார். அங்கு அது திருக்கோயிலாகி இன்றும் இலங்குகின்றது.

திருப்பூந்துருத்தியிற் சென்று வழிபட்டுத் தங்கியிருந்தார். காழிவேந்தர் பூழிவேந்தனை வாழ்வித்து மீண்டு அங்குற்றநாளில், சிவிகை தாங்கிப் புவியில் ஓங்கினார். அவ்வூர்த் திருமடத்தில்வாழ்ந்தனர் இருவரும் சிலகாலம்.

பாவேந்தர் பாண்டிநாடடைந்தார். திருவாலவாய், திருவிராமேச்சுரம் முதலியவற்றை வழிபட்டார். சோணாட்டை மீண்டும் உற்றார். திருப்புகலூரிலே வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, உழவாரப்படையால் செதுக்கும் இடங்களில், பொற்குவையும் நவமணிக்குவையும் தோன்ற அவற்றை ஓடும் கல்லுமாக மதித்து வீசியெறிந்தார் குறைவிலாத நிறைவினார். வானர மகளிர் வந்து வானரச்செயல் பல புரிந்தனர். வாகீசர் மயங்காத மனத்தீசருமாய் விளங்கினார். மயக்கவலியின்றித் தியக்கம் எய்திமீண்டனர் அம் மகளிர். திருப்புகலூரிலே இடையறாது வழிபட்டு மன்னிய அன்புறுபத்தி வடிவான வாகீசர் பலபாடி, சிவாநந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக் கீழ் அமர்ந்துள்ளார். அந்நாள் சித்திரைச் சதயத் திருநாள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடிவாழ்க!

கந்த புராணம்

பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் லரசர்தாள் தொழுது போற்றுவாம்

-கச்சியப்ப சிவாசாரியார்