உ திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை 1. திருவதிகை வீரட்டானம் பதிக வரலாறு: நீரார் கெடில வட நீள் கரையின் நீடுபெருஞ் சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து நாதன்தாள் நண்ணுவாராய்த் தூய சிவ நன்னெறியே சென்று, பேராத பாசப் பிணிப்பு ஒழிய ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அச் செம்பவளக் குன்றை - சுடரொளியைத் தொழுது, “என்னை ஆண்டருளினீர் ஆகில், அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்தாள வேண்டும்” எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தார். பவ வினை தீர்ப்பவர் அதைத் திருவுள்ளம் பற்றினார்; தபோதனியாரது கனவின் கண் போந்தார்; “நீ உன் மனக்கவலையை ஒழி. என்னை அடைய முன்னமே முனியாகித் தவமுயன்றுள்ளான் உன் உடன் பிறந்தான்; அன்னவனைச் சூலைமடுத்து ஆள்வன்”என அருளினார்.
|