பக்கம் எண் :

309
 

அவ்வாறே மருணீக்கியாரைச் சூலைநோய் வடிவாய் நின்று தடுத்துக் கொணர்ந்த திருவருள், செய்தவமாதரது திருமடத்திற் சேர்த்தது.

அக்கையார் அடியில் விழுந்து இறைஞ்சினார் தம்பியார்.“பெருமானருளை நினைந்து எழுந்திரீர்” என மொழிந்தார் திலகவதியார். மருணீக்கியார் எழுந்து தொழுதார்.“இஃது அதிகைப் பிரான் அருளே. அப்பற்றறுத்த பரமனடி பணிந்து பணி செய்வீர்” எனப் பணித்தார். அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சினார் மருணீக்கியார். திலகவதியார் சிவபெருமான் திருவருளை நினைந்து திருநீற்றைத் திருவைந்தெழுத்தோதிக் கொடுத்துத் திருவீரட்டம் சென்று உள்ளே புகக் குறித்தார். அத் திருவாளன் திருநீற்றினை அப் பெருந்தகையார் பெருவாழ்வு வந்தது எனப் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து வந்தார்.

உற்ற விடத்து உய்யும்நெறி தர முன்பு தோன்றிய திலகவதியார் முன்னே செல்லப் பின்னே சென்றார் பிற்றோன்றலார்.

திருப்பள்ளியெழுச்சி வேளை. திருநீறணிந்த அவர் அகத்திருளும் மாறிற்று. உலகில் இரவில் நிறைந்த புறத்திருளும் போயிற்று.

ஆண்டிற் சிறுமையும் அடிமையிற் பெருமையுமுடைய அம்மையார்திருத் தொண்டிற்குரியவற்றொடு தம்பியாரைக் கொண்டு திருவதிகை மாநகருள் புகுந்தார். இருவரும் தொழுதனர்; வலங்கொண்டிறைஞ்சினர்; நிலமிசை விழுந்து வணங்கினர்.

தம்பிரான் திருவருளால் மருணீக்கியார் உரைத்தமிழ் மாலைகள் சார்த்தும் உணர்வு பெற்றார்; அதனை உணர்ந்தார்; உரைத்தார்; அவற்றுள் முதலாவது “கூற்றாயினவாறு விலக்ககிலீர்”என நீடிய (தி.12 திருநாவு. 70.) இக்கோதில் திருப்பதிகம்.