பக்கம் எண் :

36
 

கூறுகிறது. நன்மையிலும் பெரிய நன்மை இறைவழிபாடேயாம். ஆதலால் அவரவரும் பாவம் செய்த அவ்வக்கரணங்களைப் பரமன் வழிபாட்டில் ஈடுபடச் செய்தால் பாவங்கள் தீர்ந்து பயன் பெறலாம் என்பது ஞானசம்பந்தர் அருளுரை. இக்கருத்தமைந்த பாடல் காண்க.

உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம

செயறீங்கு குற்ற முலகில்

வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண

மிகவேத்தி நித்த நினைமின்

வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து

வளர்கங்குல்நங்கை வெருவத்

திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்

திருநாரை யூர்கை தொழவே.

-தி.2 ப.86 பா.1

உரையினில் வந்த பாவம் - வாக்கினால் வந்த பாவம். உணர்நோய்கள் - மனத்தினால்நினைந்த பாவம். இதனை நோய் என்றார் அடிப்படை அதுவேயாகலின். உம்மசெயல் தீங்கு குற்றம் - உம்முடைய செயலால் வரும் தீங்காகிய குற்றங்கள் - அளவில்லாமல் செய்கின்றோம். அதனால் மிகஏத்தி நித்தம் நினைக. திருநாரையூர் இறையை-கையால் தொழுது, நினைத்து, துதித்து, தொழுதால் வினை அகலும் - வீடுபேறு கிட்டும் என்பது உணர்க.

இதனை ஞானசம்பந்தர் திருவண்ணாமலைப் பதிகப்பாடல் ஒன்றில் குறிப்பிடுதலும் கண்டுதெளிக. “நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில் என்பது அப்பாடல் தொடர்.

திரு அங்கமாலை:

திருஞானசம்பந்தர் வேதம் போலச் சுருக்கமாகச் சொல்வனவற்றை நாவுக்கரசர் ஆகமம்போல் விளக்கிச் சொல்வார். ஞானசம்பந்தர் முக்கரணங்களால் செய்கின்ற தீங்காகிய குற்றங்களை அம்முக்கரணங்களையும் இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி அக்குற்றங்களைக்களைக என்று அறிவுறுத்தினார்.

அதே கருத்தை விரிவாகவும் விளக்கமாகவும் மனிதனின் அடிமுதல் முடிவரையுள்ள அத்தனை உறுப்புக்களும் குற்றம் செய்வதால் திருநாவுக்கரசர் திருஅங்கமாலைப் பதிகத்தில் அவ்வுறுப்புக்களையெல்லாம் இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி இன்னல் களைந்து இன்புறுக என விளக்கியுள்ளமை அறிந்து போற்றத்தக்கது.