பக்கம் எண் :

48
 

திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ

மருவளர் மாலைஓர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து

உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே.

-தி.8 திருக்கோவையார்பா.1

பசுபதித் திருவிருத்தம்

“சாம்பலைப் பூசி” எனத் தொடங்கும் திருவிருத்தப் பதிகப் பாடல்கள் எட்டு மட்டுமே உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் “எம்மையாளும் பசுபதியே” என்றே முடிகிறது. இப்பதிகம் திருப்புகலூரில் இருந்து பாடியருளிய பொதுப்பதிகங்களுள் ஒன்று என்றே பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

இப்பதிகத்துள் “உடம்பைத்தொலைவித்து உன்பாதம் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண்டாய்” என்றும், “தாரித்திரம் விரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரித்திரைப் பவ்வம்நீக்கு கண்டாய்” என்றும், “ஒருவரைத் தஞ்சம் என்றெண்ணாது உன்பாதம் இறைஞ்சுகின்றார்.

அருவினைச்சுற்றம் அகல்வி கண்டாய்”என்றும் “இடுக்கொன்றும் இன்றி எஞ்சாமை உன்பாதம் இறைஞ்சுகின்றார்க்கு, அடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய்” என்றும் “சித்தத்துருகிச் சிவன் எம்பிரான் என்று சிந்தை உள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார் பிணி தீர்த்தருளாய்” என்றும் அடியார்கட்கு இடர்வாராது தவிர்க்க வேண்டுகின்றார்.

இப்பதிகம் பொதுப்பதிகத்துள் இடம் பெற்றுள்ளதெனினும், இது அப்பர் அவதாரத் தலமாகிய திருவாமூர் பசுபதீசுவரரைக் குறித்ததாகவே தோன்றுகிறது. மருள்நீக்கியாராய் திருவாமூரைவிட்டு வெளியேறியபிறகு அப்பர் திருவாமூர் சென்றாரில்லை. எனினும் இப்பாடல்கள் எட்டும் அவ்வூர் பசுபதீசுவரரை நினைவு கூர்ந்து பாடியதாகவே தோன்றுகிறது. சிந்தித்துப் பயன்பெறுக.

நிறைவுப்பதிகம்

“பவளத்தடவரைபோலும் திண்தோள்” என்பது நான்காம்