திருமுறையில் 113ஆவது நிறைவுப்பதிகம். இதன் நிறைவுப்பாடல் “மேலும் அறிந்திலன் நான்முகன்”என்பது. அயன் அன்னமாய்ப் பறந்து மேற்சென்று இறைவனின் முடியைக் காணவில்லை. மாலும் பன்றியாய்க் கீழச்சென்று இறைவனின் அடியைக் காணவில்லை. ஆனால் வழிபாடு செய்த மார்க்கண்டேயர் மீது பாசம் வீசி மயங்கிய சிந்தை உடைய காலன் (இயமன்) இறைவனின் திருவடியை அறிந்தான் என்று நிறைவு செய்கிறார் அப்பர். ஆம் பெருமான் இயமனை உதைத்த போது அவர் திருவடி அவன் மீது பட்டதல்லவா? இதனையே சமத்காரமாகக் குறிப்பிட்டுள்ளார். இது மறக்கருணையாகக் கொள்ளலாம். நான்காம் திருமுறையின் தொடக்கத்தில்,“கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்று கூற்றுத் தொடர்பு வந்துள்ளதும், நிறைவுப்பாடலில் “காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழலடியே” என்று காலன் தொடர்பு வந்திருப்பதும் திருவருட் பொருத்தமாக உள்ளது. இவ்வண்ணம் பலவேறு சிவநெறிக் கருத்துக்களைத் தெளிவாக விளக்கியுள்ள நான்காம் திருமுறைப்பாடல்களைப் பக்தர்கள் பண்பொருந்தவும் பொருள் பொருந்தவும் பாடியும் படித்தும் பயன் அடைய ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம். சிந்தைதிருந்தத்திருமுறை வளர்க! | சிந்தைதெளியச்சிவநெறி மலர்க!. |
|