பக்கம் எண் :

50
 


குருபாதம்

பதிப்புரை

“இடையறாப்பேரன்பும்மழைவாரும் இணைவிழியும்

உழவாரத்திண்

படையறாத்திருக்கரமும் சிவபெருமான்திருவடிக்கே

பதித்தநெஞ்சும்

நடையறாப்பெருந்துறவும்வாகீசப் பெருந்தகைதன்

ஞானப்பாடல்

தொடையறாச்செவ்வாயும்சிவவேடப் பொலிவழகும்

துதித்து வாழ்வாம்.”

- ஸ்ரீ சிவஞான சுவாமிகள்.

தேவாரத் திருமுறைகளில் 4, 5, 6 திருமுறைகளை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள். இவர்தம் அருட்பாடல்கள், திருஞானசம்பந்தர் தொகுத்துச் சொல்லும் இறைவன் பெருமைகளை விரித்துச் சொல்லுவனவாய், அறவுரைகளால் ஓதுவோர் உள்ளங்களை இறையருளில் ஈடுபடுத்துவனவாய் அமைந்து விளங்குவன.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சம காலத்தவர்கள். தமிழகத்தின் வடபகுதியில் சைவ சமயத்தை நிலை பெறச் செய்தவர் திருநாவுக்கரசர். சமண் சமயம் சார்ந்திருந்த மன்னன் மகேந்திரவர்மப் பல்லவன் இவர் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து, சைவத்தின் பெருமையை உணர்ந்து சைவசமயம் சார்ந்தான்.

தமிழகத்தின் தென்பகுதியில் பரவியிருந்த அமண் மாசறுத்த கவுணியர் பெருந்தகை திருஞானசம்பந்தர். நின்றசீர் நெடுமாற பாண்டியன் திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களை அறிந்து, சைவ சமயத்தின் சிறப்பினை உணர்ந்து சைவம் சார்ந்ததை அவர் வரலாற்றால் அறியலாம்.