திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இணைந்து பல தலங்களுக்கும் யாத்திரை செய்து மக்கட்குச் சைவ சமயத்தின் சிறப்பினை உணர்த்தித் திருப்பதிகங்கள் அருளிச் செய்துள்ளனர். திருநாவுக்கரசர் இறைவனைப் பாடிப் பரவுவதோடு கையில் உழவாரப்படை ஏந்திக் கைத்தொண்டும் புரிந்தவர். “திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர்” என இவரைச் சேக்கிழார் போற்றி உரைக்கின்றார். தேவாரத் திருமுறைகளில் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 49000 என்று சுந்தரரும், நம்பியாண்டார் நம்பிகளும், திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றனர். “பதிகம் ஏழெழுநூறு பகரும் மாகவி யோகி” என்பது நம்பியாண்டார் நம்பிகளின் திருவாக்கு. “இணைகொள் ஏழெழு நூறிரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்” என்பதுசுந்தரர் வாக்கு. நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளை அபயகுலசேகர மன்னன் வேண்டுகோளின் படிதொகுத்த காலத்தில் திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களில் 321 மட்டுமே கிடைத்தன என்றும், அவற்றை 4, 5, 6 திருமுறைகளாகத் தொகுத்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்று அவர் அருளிய திருப்பதிகங்கள் மூன்று திருமுறைகளிலுமாக 312 மட்டுமே உள்ளன. நம்பிகளால் தொகுக்கப்பட்ட திருப்பதிகங்களிலும் 9 பதிகங்கள் இன்னும் நமக்குக் கிடைத்தில. திருநாவுக்கரசரின் திருப்பதிகங்கள் பெரும்பாலும் பத்துத் திருப்பாடல்களைக் கொண்டவை. பத்தாவது திருப்பாடலில் இராவணனுக்கு அருள்புரிந்த செய்தி குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். முற்பிறவியில் இராவணனுக்கு இரங்கியமையால் இப்பிறவி தனக்கு வாய்த்தது என்ற குறிப்புப்பட ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாடலிலும் இராவணன்
|