வரலாற்றைத் திருப்பதிகங்கள் தோறும் அப்பர் தவறாது குறித்தலைக் காணலாம். “வாக்குக் கருணகிரி வாதவூரர் கனிவில் தாக்கில் திருஞான சம்பந்தர் - நோக்கிற்கு நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார் சொற்குறுதி அப்பரெனச் சொல்.” என்பதொரு வெண்பா அப்பர் பாடல்கள் உய்தி பெறுதற்குரிய உறுதிச் சொல்லால் இயன்றுள்ளதை எடுத்துக் கூறுகிறது. நான்காம் திருமுறையில் கொல்லி, காந்தாரம, பியந்தைக் காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி ஆகிய 10. பண்களுடன் அமைந்த பதிகங்களும், திருநேரிசை, திருவிருத்தம் ஆகிய பதிகங்களும் ஆக 113 பதிகங்கள் உள்ளன. இவற்றுள் நேரிசை, விருத்தம் ஆகியன இயற்றமிழ்ப் பாடல்கள் எனவும், கொல்லி என்னும் பண் வகைக்குரியன எனவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. நான்காம் திருமுறையுள், - சூலை நோய் நீங்கியது, - கொலை யானையைக் கண்டு அஞ்சாதது, - கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறியது, - இடபக்குறி சூலக்குறி பெற்றது, - அரவு தீண்டிய அப்பூதி அடிகள் மகனார்க்கு விடம் தீர்த்தது, - கயிலைக் காட்சி கண்டது ஆகிய அற்புதங்கள் குறித்த திருப்பதிகங்கள் உள்ளன. இத்திருமுறைக்குத் தருமை ஆதீனப் புலவர் சித்தாந்த ரத்னாகரம் மதுரகவி திரு. முத்து.சு. மாணிக்கவாசக முதலியார் (தொண்டை மண்டல ஆதீனம் 229 ஆவது குருமகா சந்நிதானம்) விளக்கக் குறிப்புரை வரைந்துள்ளார். செந்தமிழ்க் கலாநிதி, பண்டித வித்துவான் திரு. தி. வே. கோபாலய்யர் எழுதிய பொழிப்புரை இப் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பெற்றுள்ளது.
|