பக்கம் எண் :

56
 

சூலை நோய் பகலவன் முன் பனியெனப் பறந்தது. இவருக்கும் இறைவன் “நாவுக்கரசு” என்னும் அழகிய பெயரை அளித்தார்.

அதுமுதற்கொண்டு சிவனைப்பாடுவதையே தம் பிறவிப் பயனாய்க் கொண்டார். கோயிலில் உழவாரப்பணி செய்து “என்கடன் பணி செய்துகிடப்பதே”என்றொழுகித் தொண்டின் மூலமாக இறைவனின் உண்மை வடிவத்தினை உணர்ந்தார்.

“சத்தியமே கடவுள், தொண்டின் மூலமே அவனை அடைய முடியும்” என்று நம் காலத்தில் மகாத்மாகாந்தி அடிகள் கூறினார். அவருடைய வார்த்தைகளுக்கு இலக்கியமாய்த் திகழ்பவர் நம் அப்பர்.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்ற தேவாரம் அவருடைய மெய்யநுபவ நிலை எது என்பதை நன்கு விளக்கும்.

“நாமார்க்கும் குடி அல்லோம்” என்று முழங்கிய அப்பர், வேந்தனையும் தம் அருளாற்றல் மூலம் தம்வழிக்குத் திருப்பினார்.

சம்பந்தரும், அப்பரும் இறைவனின் பெயரால் தெருவெலாம் தமிழ்ப் பாடல்களை இசைத்தனர். அவர்களின் பக்திப் பெருக்கால் அந்நாளில் தமிழும் சைவமும் மறு வாழ்வு பெற்றனவென்றே கூறலாம்.

அன்பர் பணியிலே இன்பநிலை கண்டவர் அப்பர். மனிதக் காதலைத் தெய்வக்காதலாக மாற்றிய புண்ணியர். அகிம்சையே அவர் ஆயுதம். தொண்டே அவர் கடமை.

இவருடைய பாடல்களில் சோலையின் அழகும், வானத்தின் செறிவும், நிறைந்து விளங்குவதைக் காணலாம். இயற்கையின் எழிலோடு இறைவனைப் பாடிப்போற்றியவர். இவரது பாடல்களைப் படிப்பதால் நம்மைச் சூழ்ந்துள்ள அக இருளும், புற இருளும் மறைந்தோடும்; உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகும்.

தெய்வ மணங் கமழும் இவரது தித்திக்கும் பாடல்களைத் தருமை ஆதீனத்தார் வெளியிடுவது மிகவும் பொருத்தமுடையது. இவர்களின் வெளியீட்டிலே ஒவ்வொரு பதிகத்திற்கும் அதனுடைய