கூடச் சிலர், ஆங்கிலமே ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று கூறவில்லையா? இதனால் அவர்கள் “ஆங்கிலேயர்கள்”என்று பிற்கால வரலாற்று அறிஞர் யாராவது கூறினால் அது எவ்வளவு நகைப்பிற்குரியதாக இருக்கும்? வடமொழிப்பயிற்சியும், அம்மொழியிற் பற்றும் கொண்டவனாக மகேந்திரன் இருந்தான் என்ற காரணமே சரியான காரணமாகும். இவ்வேந்தன் காலத்தில்தான் நம் நாவுக்கரசர் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார் என்பது. தென் மொழியும், வடமொழியும்,நன்கு கற்றவராக இருந்தார். தாம் கற்ற கலைகளின் பயனாய்உலகத்தின் நிலையாமையை நன்கு உணர்ந்து சமணத்துறவியானார்.சமண நூல்களை நன்கு கற்று அவற்றில் வித்தகராக விளங்கினார். இவருடைய ஆழ்ந்த புலமையைக் கண்டு இவருக்குத் “தருமசேனர்” என்னும் சிறப்புப் பெயரை அவர்கள் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் இவருடைய தமக்கையாகிய திலகவதியார் தம் அருமைத் தம்பி “சைவ நெறியைப் பின்பற்றாமல் சமண நெறியில் சென்றுவிட்டானே” என்று வருந்தினார். இரவும் பகலும் இறைவனை நோக்கித் தம் தம்பி மீண்டும் சைவ நெறிக்குத் திரும்ப அருளுமாறு வேண்டினார். அங்ஙனம் வேண்டும் அவ்வம்மையார் முன்,ஆண்டவன் ஒருநாள் கனவில் தோன்றி “நீ உன் மனக் கவலையை ஒழி; நின் இளவலைச் சூலை நோய் மடுத்து ஆட்கொள்வேன்; அவன் முன்னமே என்னை அடையத் தவம் செய்துள்ளான்” என்று கூறி மறைந்தருளினார். அவ்வாறே தருமசேனர் சூலை நோயினால் பீடிக்கப் பெற்றுச் சொல்லொணாத் துன்பமுற்றார். சமண முனிவர்களின் மந்திரமும், மாயமும் அவர் நோயைச் சற்றும் தணிக்க முடியவில்லை. இறுதியில் தம் தமக்கையை வந்தடைந்தார். தம்பிக்குத் திருநீற்றை அணிவித்து, அவரை உடன் அழைத்துக்கொண்டு திருவீரட்டானத் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார். இங்குத்தான்“கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னும் திருப்பதிகத்தைப் பாடித் தம் சூலை நோயின் துயரை ஆண்டவனிடம் எடுத்துக் கூறி அதனைத் தீர்க்கும்படி வேண்டினார்.
|