உணர்வார்க்கு அது தமிழ்ச்சொல்லாதல்புலனாகும். இதுகாறும் உணர்த்தியவாற்றால், ‘திருமுறை’ என்றது ‘அருள் நூல்’ என்னும் பொருளதாதல் நன்கு விளங்கும். பனுவல், நூல் என்ற பெயரின் காரணங்கள் முன்னோரால் விளக்கப்பட்டுள்ளன. ‘அருள் நூல்’ என்றது வடிவையும் பொருளையும் குறித்தல் வழக்கில் அறியப்படுகின்றது. ‘தோத்திரம்’ என்பதும் தோத்திர நூல்களையும் அந் நூல்களில் அமைந்த தோத்திரப் பாடல்களையும், அப் பாடல்களின் உருவாய்த் திகழும் போற்றுக்களையும் உணர்த்தும். வீரட்டானத்துறை அம்மானே, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்தறியேன்; என்னை நலிவதனை நணுகாமல் துரந்துகரந்தும் இடீர்; அஞ்சேலும் என்னீர்’ என முன்னிலையிலே அமைந்த போற்றும் - ‘கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்; முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை; அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி; எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே’ என்று கடவுளைப் படர்க்கையிலும் கடவுளைக் குறித்த தனது செயலைத் தன்மையிலும் கூறிய போற்றும் - ‘தோத்திரம்’ என்றே சொல்லப்படும். இந் நாலாந் திருமுறையிலே பலவகைப் போற்றும் - இலங்குகின்றன. விரிவஞ்சி ஈண்டு அவற்றைக் குறித்திலேன். ‘மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னியமன்னே’ என்றது மணிவாசகம். அத்திறத்தில், தோத்திரமோ சாத்திரமோ கடவுளே அவற்றின் உருக்கொண்டு, அருளப்பெற்றால் தான் அவற்றின் பயன் உயிர்க்கு உண்டாகின்றது. கடவுளும் கடவுளருள் வழிப்பட்ட சான்றோரும் அருளாவகையில் வந்த பிறர் தோத்திரமும் சாத்திரமும் என்றும் எவர்க்கும் பயன்படா. இவ்வுண்மையை நிறுவப் பற்பல நூல்கள் உள்ளன.
|