போற்றுவர். ‘திருமுறை’ முதலியன பண்டு பனையோலை வடிவில் அமைந்திருந்து இன்று தாள் வடிவிலும் உள்ளன. முறை என்பது நிரல் படச் செய்த பொருட் கோவையைக் குறிக்கும். ‘கிரமம்’ என்ற வடசொற் பொருளைத் தமிழில் ‘முறை’ என்பது கொடுக்கும். நிரல் படத் தொகுத்த பொருட்கோவை பனுவல் (புத்தகம், பொத்தகம், நூல்) எனப்படும். அதை‘முறை’ என்றும் முன்னோர் மொழிந்தனர். ஆசிரியர் தமது நூலை அமைத்த முறையில், கற்போர் உணர்தலும் கற்பிப்போர் உணர்த்தலும் கடன். ‘இறையும் ஞானம் இலாத என்புன்கவி முறையின் நூலுணர்ந்தாரும் முனிவரோ’ என்ற கம்பர் கூற்றாலும் அது விளங்கும். நூலுணர்ச்சிக்கு அந் நூல் ஆசிரியர் அந் நூலில் அமைத்த முறையும், உரையாசிரியர் அந்நூற் பொருளை உணர்த்தும் முறையும், அந் நூலின் பொருள்கோளாளர் உணரும் முறையும் ‘முறை’ என்னும் பெயரின் பொருள் முதனிலையாகும். “இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவரை வேன்என முயல்வ தொக்குமால் அறுமுகம் உடையதோர் அமலன் மாக்கதை சிறியதோர் அறிவினேன் செப்ப நின்றதே” என்னும் கந்தபுராணத்து அவையடக்கப் பாடலில், ‘முறை’ என்றது ‘பொத்தகம்’ என்னும் பொருளைக் குறித்தல் காண்க. பண்டைப் பள்ளிகளில், ஆசிரியர், தம் மாணாக்கர் பலரையும் ‘முறை’ சொல்வித்தல் உண்டு. அம் ‘முறை’யே ஓதுவித்தலுக்கும் ஓதலுக்கும் உரித்து. கற்பித்தற்கும் கற்றற்கும் ஓதுவித்தற்கும் ஓதற்கும் முறை பிறழ்ச்சி சிறிதும் கூடாது. இத்தனையும் கருதியே ஆன்றோர், ‘முறை’என்னும் பெயரைப் பொத்தகத்திற்கு இட்டனர். ‘புஸ்தகம்’ என்னும் வடசொல்லின் திரிபாகிய புத்தகம் வேறு. பொத்தகம் வேறு. ‘பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள்சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை விமலை’ என்ற கம்பர் மொழியை ஈண்டுக் காண்க. பொத்து + அகம். 1பனையோலையேட்டைப் பொத்தும் முறைமை
1. பனைக்குரிய போத்து எனும் பெயர் பொத்து எனவாகி அது ஆகுபெயராய் ஏட்டுக்காகி அவ்வகையால் ஏட்டுச் சுவடி பொத்தகம் என ஆயிற்று எனலுமாம்.
|