பக்கம் எண் :

669
 

36. திருப்பழனம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திங்களூரினின்றும் திருமறையோர்களுடன் திருப்பழனம் சேர்ந்து தங்கு பெருங்காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து, பொங்கிய அன்புற வணங்கி நின்று போற்றிசைத்த தீந்தமிழ்த் தொடைமாலைகளுள் ஒன்று இத் திருப்பதிகம்.

திருநேரிசை

பதிக எண்: 36

திருச்சிற்றம்பலம்

354.ஆடினா ரொருவர் போலு

மலர்கமழ் குழலி னாளைக்

கூடினா ரொருவர் போலுங்

குளிர்புனல் வளைந்த திங்கள்

சூடினா ரொருவர் போலுந்

தூயநன் மறைக ணான்கும்

பாடினா ரொருவர் போலும்

பழனத்தெம் பரம னாரே.

1

1. பொ-ரை: திருப்பழனத்து எம்பெருமான் திருக்கூத்தாடுபவரும், மலர் நறுமணம் வீசும் கூந்தலாளாகிய பார்வதியின் பாகரும், கங்கையும் பிறையும் சூடிய ஒப்பற்றவரும் தூயமறைகள் நான்கினையும் பாடுபவரும் ஆவார்.

கு-ரை: திருப்பழனத்திலே திருக்கோயில் கொணெ்டழுந்தருளிய எம்முதல்வனார் திருக்கூத்தாடியவரும், அலர்கள் மணம் வீசும் கூந்தலையுடைய மங்கையைக் கூடியவரும், தண் (கங்கை வெண்)ணீரையும் வளைந்த பிறையையும் சூடியவரும், தூயனவும் நல்லனவும் ஆகிய நான்கு வேதங்களையும் பாடியவரும் ஆன ஒருவர் போலும்.

தூய்மை - பொருட்குற்றம் இல்லாமை. நன்மை - சொற்குற்றம் ஓசைக்கேடு முதலிய தீமையில்லாமை. ‘வேதங்கள் நான்கும் ... பண்ணினார்’. (தி.4 ப.36 பா.1.)