தமிழ்ப் பெருங்குடிமக்களுக்குத் திருமுறைகளை உரையோடு வழங்கி வரும் இத்தகைய பணிபுரிந்து, ‘உலகத்தார் உள்ளத்து ளெல்லாம்’ நிலைத்துவிட்ட தருமை ஆதீனம் இவ்வரிசையில் திருநாவுக்கரசு சுவாமிகளின் திருமுறைகளை இப்போது வெளியிடத் தொடங்கி, நான்காம் திருமுறையைச் செவ்விய உரையோடு செந்தமிழ் உலகுக்கு இஞ்ஞான்று வழங்குகிறது. இத் திருக்கை வழக்கம் தருமை ஆதீனத்து 25ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருப்பவர்களும், அடியவனை ஆட்கொண்ட ஆசாரியப் பெருந்தகையும், சமய‘சமூக’ இலக்கியப் பணிகள் புரிவதையே குறிக்கோளாகக் கொண்டுவீற்றிருப்பவர்களும் ஆகியசீலத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுடையது என்பது யாவரும் எண்ணி எண்ணி இன்புற வேண்டுவதாகும். ஆட்சியேற்ற நாள்முதல் அறப்பணி பல புரிந்து வரும் இவ் வருளரசு இக்காலை ஆன்மீக ஞான அநுபவச் செல்வத்தை அறிவுலகுக்கு உரையோடு வழங்க முற்பட்டிருப்பது தமிழ் உலகு புரிந்த தவமே யாகும். இரண்டாம் திருமுறைக்கு உரையெழுதிய முதுபெரும்புலவர் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களையே இத் திருமுறைக்கும் உரையெழுதத் தேர்ந்ததும் திருவருள் வாய்ப்பே. சித்தாந்த நூல்களிற் சிறந்த புலவரும், திருமுறைப் பயிற்சியிற் சீரிய வரும், இலக்கண இலக்கியங்களில் வழிவழிவந்த அறிஞருமாகிய திரு. முதலியாரவர்கள் திருநாவுக்கரசு சுவாமிகளின் அநுபவ வாக்குக்கு உரையெழுதத் தகுதி உள்ளவர்கள். இவர்களது இச்சீரிய குறிப்புரையின் பலபகுதிகளையும் பயிலும் வாய்ப்பை எனக்கு வழங்கியருளிய குருமகாசந்நிதானம் அவர்கள், இக்குறிப்புரை மாட்சிகளையும் விதந்தெழுதும் வண்ணம் ஆணை பிறப்பித்தது யான் செய்த தவப்பேறே என மதிக்கின்றேன். ஏனெனில், அநுபவப் பயிற்சியில்லாத எனக்கு இது ஓர் அருளிப்பாடே யல்லவா? இரண்டாவது திருமுறையையும், அதற்குத் திரு. முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புரையையும் படித்தறிந்து அத் திருமுறைப் பதிப்பிலேயே ‘குறிப்புரைமாட்சி’ யெழுதும் பேறும் முன்னர்ப் பெற்றேன். உரையாசிரியரின் பரந்த அறிவை உணரும் பெருவாய்ப்புப் பெற்றது போலவே இத்திருமுறையிலும் உணரலானேன்.
|