பக்கம் எண் :

70
 

கையில் உழவாரப் படையுடன் தமிழ்நாட்டுத் திருக் கோவில்கள் தோறும் மெய்யன்பர் புடைசூழ வழிபட்டார்; வழிந்தொழுகும் தமது அநுபவத்தை இனிய வண்டமிழ்ப் பாடல்களாக வழங்கினார். உலகம்வாரி வாரி உண்டது. அருளனுபவச் செல்வரின் ஞானவிழிப்பு ஞாலத்தே ஆன்மீக மலர்ச்சியை விளைத்தது. உலகம் உய்ந்தது.

இருபதாம் நூற்றாண்டில் வாழும் நாம் இதய விழிப்பு இன்றி வாழ்கின்றோம். சிலர் கேட்கலாம்; ‘செயற்கைக் கோள்களாக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் அறிவு விழிப்பு உண்டாயிருக்கிறதே, இதய விழிப்பு இல்லை என்பது பொருந்துதல் எவ்வண்ணம்’ என்று. அறிவு விழிப்பு அக விழிப்பு என்றும் புறவிழிப்பு என்றும் இருவகை உடையது. முன்னது ஆண்டாண்டு புரண்டாலும், வினைப்பயனால் விளைவது. பின்னது எளிதில் வாய்ப்பது. இப் புறவிழிப்பிலேயே இப்புவி இந்நூற்றாண்டில் தக்கவோர் முன்னேற்றம் பெற்றிருக்கிறது. அகவிழிப்பு மலரவில்லை விரிந்த அளவில். அகவிழிப்பு உண்டாயின் உலகத்தினிடத்து அன்பு உண்டாகும்; காதல் பிறக்கும். எல்லாரும் இன்புறவேண்டும் என்ற எண்ண விரிவு ஏற்படும்; நான் உலகத்திலே ஒருவனென்ற உணர்வு பிறக்கும்; இயற்கையில் இயங்கும் திருவருட்சக்திக்கு நானோர் மகவு என்ற நல்லுணர்வு விளையும்.

இவ்விழிப்புக்குத் திருமுறையே துணை புரியும். இத் திருமுறைப் பணியைத் தொடக்கிவைத்துத் தருமை ஆதீனத்து எங்கள் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானமவர்களின் அருளாணையின் வண்ணம் திருஞானசம்பந்த சுவாமிகள்அருளிய முதல் திருமுறைக்கு, எனக்கு ஆசிரியரும், ஆதீனப் பல்கலைக் கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து இந்நாள் தமிழ் விரிவுரையாளருமான மகா வித்துவான், திரு.ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் உரையெழுதினார்கள்.

இரண்டாம் திருமுறை எனக்கு ஆசிரியரும் இத்திருமுறை உரையாசிரியரும், முதுபெரும் புலவரும் இத்தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தலைவருமான புலவர். திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியாரவர்களால் உரைஎழுதப்பெற்றது.

மூன்றாம் திருமுறைக்கு பண்டித திரு.அ. கந்தசாமிப் பிள்ளையவர்களால் உரையெழுதப் பெற்றுத், திருஞானசம்பந்தர் அருளிய மூன்று திருமுறைகளும் குறிப்புரையுடன் நிறைவுற்றன.