குறிப்புரை மாட்சி (இவ ஒரு திறனாய்வுக் கட்டுரை) முனைவர், வித்துவான் சொ. சிங்காரவேலன், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர். தமிழ்இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்த ஒப்பற்ற மொழி. அயல் நாடுகளும் இவ்வுண்மையை அறிவுறுத்தி வருகின்றன. மொழியியல் ஆராய்ச்சிக்காரர்களும் பழமையும் இனிமையும் வாய்ந்த உயர் தனிச்செம்மொழி யாகும் ஒண்டமிழ் என்று உரைக்கின்றனர். இத்தகைய பெருமை இம்மொழிக்கு எப்படி வந்தது? தெய்வீக ஆற்றலால் இம்மொழி அமிழ்தாயிற்று என நம்பலாம். தெய்வீகமே தமிழின் செறிந்த அமிழ்தம். தமிழினிமை அருளினிமை. வடவேங்கடத்தில் நெடுமாலும், தென்குமரியில் குமரித்தாயுமிருந்து அருட்காவல் புரியும் இம்மாநிலத்தின் மொழியிலும் அவ்வருளனுபவம் தேங்கியிருக்கிறது. பொங்கித் ததும்பிப் பயில்வோர் சிந்தையிலும் பாய்கிறது. அந்த அருளனுபவம் தேக்கிய - ஆன்மீக வெற்றி அடங்கிய ஞானத்தமிழ்ப் பெட்டகமாகத் திருமுறைகள் திகழ்கின்றன. அவற்றுள்ளும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைப் பாடல்களில் இன்ப அன்பின் முழு நிறைவு அநுபவம் நிறைந்து ஒளி வீசுகிறது, தண்சுவை வழங்குகிறது. திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவருட்கவிதைகளில் தோய்வோர் உலகத் தளையினின்றும் ஓய்வோர்; ஆன்மீக வாழ்வின் அடிப்படையாகிய குறிக்கோளை ஆய்வோர். அத்தகைய உயிர்ப்பு - அருள் விழிப்பு திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள்வாக்கில் மலர்கின்றது. ‘தொண்டு கிழவர்’ என்று வையம் கூறும், மிக்க முதிர்ச்சியுடைய முதியவரைக் குறிக்கும் தொடர் அப்பர் சுவாமிகளை நோக்க மிகவும் பொருத்தமாக உளது. ஏன்? தொண்டு புரிந்த கிழவர் இத் தூயோர்தாமே!
|