விளைக்கின்றார். “இத்திருப்பதிகம் முழுதும் வினைமுடிவு விளங்காத வாறுள்ளது. வினைமுடிவு விளங்காமை உயிர்க்கு இயல்பன்றோ?” என்று எழுதியுள்ள பகுதியை நினைக்குந்தோறும் கருத்திலே முறுவல் எழுதல் இயல்பேயல்லவா? (பா. 208). சம்பிரதாயங்களைப் பேணுதலிலும், அவை வழுவாமல் உரையெழுதுவதிலும் நம் உரையாசிரியர்க்கு உள்ள, உள்ள மிகுதியைப் பழகியறிந்த நான், அவர்தம் குறிப்புரையைப் படிக்குந்தோறும் ஒவ்வொரு எழுத்திலும் சம்பிரதாயமணம் கமழ்வதை உணரலானேன். எடுத்துக்காட்டாக ,இரண்டு இடங்களை ஈண்டுக் குறித்திட விழைகின்றேன். “நாகங் கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி மேகங் கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப் பாகங் கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட ஆகங் கொப் பளித்த தோளா ரதிகை வீரட்ட னாரே” என்ற திருவதிகைவீரட்டானத்துப் பாடலின் (பா. 246) உரையில்:- ‘மாதர் பண்ணுடன் பாடியாட” என்பது அம்பிகை பண்ணொடு பாடுதலும் அன்றி ஆடுதலும் செய்தாள் என்று குறித்தலாலும் ஆடுதல் காளியம்மைக்கே உரியதாக்கிக் கூறுதலாலும், சிவகாமவல்லிக்கு ஆட்டம் உண்டென்னல் மரபு அன்று ஆதலாலும், பாடி என்றதைப் பாட என்று செயவெனெச்சமாகத்திரித்துக் கொள்ளல் நன்று” என்று எழுதியிருக்கும் இடத்தினை ஓர்க. மற்றப்பகுதி வருமாறு:- ‘கொண்ட தொர் கோலமாகி’- எனத்தொடங்கும் பாடல் (பா. 440) உரையில் ‘எல்லாத் தலங்களிலும் கோயில் கொண்டிருக்கும் முழுமுதல் ஒருவனே. அவனே ஞானானந்த நடனம் புரிபவன். ஐந்தொழிற் கூத்தன். இவ்வுண்மை யறியாதார், திருமுறையில் திருக்கூத்தன் என்றுள்ள இடந்தோறும் மகேசுவரமூர்த்தியாகிய நடராசர் என்பர்’ “வரிமுரி பாடி யென்றும் வல்லவாறடைந்து” எனத் தொடங்கும் பாடல் உரையில் (பா. 254) சிலப்பதிகாரம், தொல்காப்பியச் செய்யுளியற் பேராசிரியம் முதலியவை கொண்டு வரிப் பாடல், முரிப் பாடல் என்ற இரு தமிழ்ப் பழம் பாடல்களின் பொருளை விளக்கி யிருத்தல் சிந்தித்து இன்புறத்தக்கது. பஞ்சமம் என்ற பண், பண் சமம் என்ற இருசொற்களின் இணைப்பே என்று விளக்கிய உரையாசிரியர், காந்தாரம் என்ற பண் அப்பர் சுவாமிகள் வாக்கில் கந்தாரம் என்று ஆளப்பட்டதுபோலவே
|