(கந்தருவம்) கந்திரம் என்றும் ஆளப்பட்டிருக்கலாம் என்று 313-ஆம் பாடல் உரையில் மொழிந்திருத்தல் ஆய்வுக்குரிய தொன்றாகும். “கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டனாரே” என்ற பகுதியிற் குறிக்கப் பெற்றமை காண்க. திருவிடைமருதூர்ப் பதிகமாகிய திருநேரிசை “காடுடைச் சுடலை நீற்றர்” எனத் தொடங்குகிறது. இரண்டாம் பாடல் “முந்தையார் முந்தியுள்ளார்”என்ற தொடக்கம் உடையது. “சந்தியார் சந்தியுள்ளார்” (பா. 345) என்ற தொடர்க்கு நம் உரையாசிரியர் காணும் விளக்கம் நம் கருத்தைக் கதுவுகிறது. ‘சந்தியாவந்தனம் புரிபவரது சந்தியாதியானத்திலும் அச் சந்தியிலும் விளங்கும் திருவருளுருவின ராயிருப்பவர். சந்தியார்; சந்தியாதியானத்தைச் செய்யும் வேளை யாகிய சந்தியையுடையவர், என்று சரியையாளர், கிரியையாளர், யோகியர், ஞானியர் ஆகிய நால்வகையாரையும் குறித்தது. “சந்தி யானைச் சமாதிசெய்வார் தங்கள் புந்தியானை”. (தி.5 ப.44 பா.2) ‘விண்ணென வரூஉம் காயப்பெயர்’ என்ற (தொல்-365) சூத்திரத்தில் வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக் காயம் என்னும் தமிழ் வழக்குண்மை உணர்க. ஆகாசம் என்னும் வடசொல் முதற்குறையாய்க் காசம் என வராது. வரின் அது காயம் என மருவலாம் என்று 361ஆம் பாடல் உரையில் எழுதியிருத்தல் சிந்தனைக்கு ஓர் விருந்து. பதசாரம் எழுதுதல் நம் உரையாசிரியரின் தனியியல்பு. ஆசிரியரது உள்ளத்தை அவ்வண்ணமே அறிந்து எழுதும் தனிப் பண்பு இவரது உரைப் பண்பாதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு 402ஆம் திருநேரிசைக்கு எழுதும் இவர்தம் உரைநடையாகும். அதனை ஈண்டுக் கண்டு கழிபேருவகையாதல் கடனே யல்லவா? அப்பகுதி:- “சிவபெருமானுக்குச் சொரூபம் சிவஞானமேயாதலின் ‘உமையலாதுருவமில்லை’ என்றும். உடைமை உலகம், அடிமை உயிர்கள். இரண்டும் உடைப்பொருள். அவற்றுள் உடைமையை ‘உலகலாதுடையதில்லை’ என்றும் அடிமையை‘ நமையெல்லாம் உடையர் ஆவர்’ என்றும், அவனுடைமையான உலகம் அவன் அருள்வழி நின்றொழுகும் அடிமைகளாகிய உயிர்கட்கு நன்மையேயன்றித் தீமைபயவாமையின் ‘நன்மையே தீமையில்லை’ என்றும்,
|