வினைப்பயனாக எய்தும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மேலும் வினையேறாது திருவடித்தொண்டு பூண்டார்க்கு அளவிலாது அருள்கொடுப்பது ஆண்டானது கடமையாதலின் ‘கமை (பொறுமை) யெலாம் உடையராகிக் கழலடிபரவும் தொண்டர்க்கும் அமைவு இலா அருள்கொடுப்பர்’ என்றும் அருளினார் மொழிவேந்தர்”. சொற்களின் ஆழத்தில் திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள் அனுபவத் தோய்வோடு கூடிய கருத்துக்களை அள்ளி வழங்கும் பெருமை நம் உரையாசிரியர்க்கு வாய்த்த அருமையை என்னென்பது! திருக்கச்சி மேற்றளிப் பதிகத்தின் (பா.43) முதற்பாடல் உரையிலேயே (பா. 424) ஆசிரியரின் தமிழ்ப்பற்றும், சிவதலப் பற்றும் ஒளிவிடுகின்றன. ‘கறையது கண்டம் கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்’ என்ற மூன்றாவது வரிக்கு அகல உரை எழுதுகின்றார்:- காஞ்சி - காஞ்சி என்னும் மரம் பற்றிய காரணப் பெயர்; இதனை வட சொல்லாகக் கொண்டு பல பொருள் கூறும் கற்பனை வேறு; இவ்வுண்மை வேறு. ஆலவாயில். வன்னியூர், குற்றாலம் முதலிய தமிழ்ப் பெயர்களையும் வடமொழி யறிவிற்கேற்ப மொழிபெயர்த்த திறத்தையறிக. வாயாற் சொல்லாது உளத்திலெண்ணியவற்றைச் சொன்னவாறு அறிவார் என்னும் பொருளதாய்ச் சொன்னவாறறிவார் என்றதை ‘உக்தவேதி’ என்றால் சொன்னதை அறிதலில் வியப்பென்னை? மொழி பெயர்ப்பின் குறைகட்கு இதுவும் ஒரு சான்றாகும்.. இந்த உரைப்பகுதியை மட்டும் படித்தலே போதும். உரையாசிரியர் தெய்வத் தமிழினிடத்தில் வைத்திருக்கும் பற்றை உணரலாம். எல்லாப் பற்றை விட்டவர்க்கும் தமிழ்ப் பற்றை விட முடியாதபோது, மனையற வாழ்க்கை மேற்கொண்டு மாண்புறும் இவ்வுரையாசிரியரை - தந்தையாரிடமிருந்தே தமிழிலக்கண இலக்கியங்களைத் தக்கவண்ணம் கற்ற இவ்வுரையாசிரியரை - பல சித்தாந்த சாத்திரங்களது விளக்க நூல் ஆசிரியரை - பல்லாண்டுகள் மாணாக்கர்களுக்குத் தமிழ் பயிற்றிவரும் இப்போதகாசிரியரைச் செந்தமிழ் பிணித்துக் கொண்டிருத்தலில் வியப்பும் உண்டோ? இவ்வாறு, திருமயிலாடுதுறைத்தலத்து எழுந்தருளியுள்ள அஞ்சொல் நாயகி என்ற அருமையான செந்தமிழ்ப் பெயரை, அஞ்சல் நாயகி என்று பிறழ உணர்ந்து, அபயாம்பிகை என மொழி பெயர்த்து விட்டனர் சில மொழியறியா மனிதர். இதனை உரையாடுங்கால் என்னிடம் கூறி இவ்வுரையாசிரியர் உள்ளம் வருந்தியதுண்டு. தமிழ் மொழியிற் பல்லாண்டுகளாகப் பழகி அதனைத் தம்முயிராகப்
|