பக்கம் எண் :

240தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

"பேயடையா பிரிவெய்தும்"என்னும் மேற்குறித்த திருப்பாடல் தோன்றிற்று. அதிலுள்ள "வெண்காட்டு முக்குளநீர் தோய் வினையார் பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம்பெறுவர். ஒன்றும் ஐயுறவேண்டாம்" என்னும் பொருளை அறிந்து மகிழ்ந்து, திருவெண்காட்டிற்குத் தம் மனைவியாரோடு சென்று, முக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்.
    இங்ஙனம் வழிபட்டுவரும் நாள்களில் ஒரு நாள் இறைவன் அவரது கனவில்தோன்றிச் சைவ சித்தாந்தத்தை நிலைபெறச் செய்யக்கூடிய ஒரு புத்திரனை நீ அடைவாய் என்று சொல்லி மறைந்தருளினார். அவ்வாறே அவர் புத்திரப்பேற்றை அடைந்தார். இக்குழந்தையே சைவசித்தாந்த பரமாசாரியராக விளங்கிய மெய்கண்ட தேவர் ஆவர்.
    தலவிருட்சம் : ஆலமரம்; கொன்றைமரம்.
    உள் பிராகாரத்தில், அகோரமூர்த்தி கையில் சூலத்துடன் எழுந்தருளியிருக்கின்றார். அவர்க்கு எதிரில் காளியின் சந்நிதி உள்ளது.
    சிதம்பரத்தில் இருப்பதுபோலவே இங்கு நடராஜர் பெருமையுடன் விளங்குகின்றார்.
    இப்பதியில் வெள்ளானை பூசித்துப் பேறு பெற்றது. இதை,
"வெள்ளானை வேண்டும்வரம் கொடுப்பர்
வெண்காடு மேவிய விகிர்தனாரே"
-தி.2ப.35பா.9
என்னும் அப்பர் பெருமானின் இத்தலத் தேவாரப் பகுதியாலும்,
"அயிரா வதம்பணிய மிக்கதனுக்
கருள்சுரக்கும் வெண்காடு"
-தி.2ப.48பா.7
என்னும், ஞானசம்பந்தர் தேவாரப் பகுதியாலும் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, அப்பர் பதிகம் இரண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் இருக்கின்றன.
    சைவ எல்லப்ப நாவலர் தலபுராணத்தை இயற்றியுள்ளார். அது அச்சில் வெளிவந்துள்ளது.