பக்கம் எண் :

60ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு(ஐந்தாம் திருமுறை)

காணப்படும் எடுத்துக்காட்டாக;
     "அருத்தனை அரவைந்தலை நாகத்தை" (தி.5.ப.4,பா,9) என்பதில், 'அரவைந்தலை நாகம்' என்பதற்கு, 'முன் பின்னாகத் தொக்க இருபெயரொட்டு ஐந்தலை நாகமாகிய அரவு என்க' என்றும்,
     "இடைமாமரு தில்லெழு - பணையி லாகமம் சொல்லுந்தன் பாங்கிக்கே" (தி.5.ப.15.பா.4) என்பதில், 'பணை' என்பதற்குத் திருவிடைமருதூர்த் தலவிருட்சமாகிய மருதமரம் எனப் பொருள்கொண்டு, 'பணை - மருதநிலம்; அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று' (இடவாகு பெயர்) என்றும் குறிப்பெழுதியிருத்தல் முதலியவற்றைக் காண்க.
     இங்ஙனம் இலக்கணம், இலக்கியநயம், தத்துவக் கருத்துக்கள், வேத ஆகம சித்தாந்த நுண்பொருள்கள் பலவும் விளங்குமாறு அமைந்த இவ்வைந்தாந் திருமுறையுரை இதனை அன்புடன் ஓதி உணர்வார்க்குப் பல்லாற்றானும் சாலவும் பயன் தருவதாகும்.
     பொழிப்புரையாசிரியர், தமிழில் புலவர் பட்டத்துடன், ஆங்கிலத்தில் எம். ஏ., பட்டம் பெற்ற சிறப்புடையவர்; குறிப்புரை ஆசிரியர், தமிழ்ப் புலமையோடு திருமுறைகளை ஆழ்ந்து பயின்று, 'திருநெறிச் செம்மல்' புலவர் பட்டமேயன்றி வடமொழியிற் சிரோமணி என்னும் சீரியதொரு பட்டத்தைப் பெற்ற பெருமையுடையவர்; திருப்பதிகவரலாற்று ஆசிரியர், தமிழ்மொழியிற் புலவர் பட்டமும், அதுமட்டுமன்றி, வடமொழியிற் சிரோன்மணிப் பட்டமும் பெற்ற சீர்த்தி யுடையவர். இம் முப்பெரும் பேராசிரியர்களும் ஒருங்கிருந்து ஆய்ந்து அமைத்துள்ளது இவ்வுரை எனின், இது பல்லாற்றானும் சிறந்து விளங்குதல் சொல்ல வேண்டாவன்றோ!
     இத்தகைய புலவர் பெருமக்களைக்கொண்டு இவ்வுரையினை ஆக்குவித்தும், சிறந்த முறையில் அச்சிடுவித்தும் உலகிற்கு உபகாரமாம் வண்ணம் வெளியிட்டருளிய, தருமை ஆதீனம் 25- ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளது பெருங்கருணைத்திறத்திற்குச் சைவ உலகமும், தமிழ் உலகமும் பெரிதுங் கடப்பாடுடையனவாகும். இவ்வுரையின் சிறப்பினைக் கண்டு கூறும் வாய்ப்பினை அடியேற்கு அளித்தருளிய ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களது திருவடித் தாமரைகட்கு எளியேனது மனமொழி மெய்களாலாகிய வணக்கத்தைச் செலுத்திக்கொள்ளுகின்றேன்.