பக்கம் எண் :

1
 

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்

26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த

பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற

கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்

சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்துநின்றென்

தாயானைத் தவமாய தன்மை யானைத்

தலையாய தேவாதி தேவர்க் கென்றும்

சேயானைத் தென்கூடல் திருஆ லவாய்ச்

சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

- அப்பர் (தி.6 ப.19 பா.8)

தமிழின் சிறப்பு:

உலகில் இன்று வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்திற்கும் மேல் உள்ளன, என்பர் ஆய்வறிஞர்கள். அவற்றுள்ளும் தொன்மை வாய்ந்த மொழிகள் தமிழ், சம்ஸ்கிருதம், இபிரேயம், கிரேக்கம், இலத்தின் என்பனவாம். இவற்றுள்ளும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழி, தமிழ் மொழி ஒன்றே என்பது தமிழ் மக்கள் பெருமை கொள்ளத் தக்கதாம். மேலும் தமிழ்மொழி, பிறமொழிக் கலப்பின்றியும், துணையின்றியும் தானே தனித்தியங்கும் பேராற்றல் பெற்றுள்ளது. மொழி உலகமே முன்பின் கண்டறியாத காதல் கனிந்த அகப்பொருள் இலக்கணத்தையும், வீரம் விரவிய புறப்பொருள் இலக்கணத்தையும் தன்னிடத்தே கொண்டு திகழ்கிறது.

அகப்புறப் பாகுபாடு:

அகப்பொருளாம் காதல் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி அகத்திணை என்றும், வீரம் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி புறத்திணை என்றும் பேசப்பெறும். திணை என்பது ஒழுக்கம். எனவே