பக்கம் எண் :

2
 

அகஒழுக்கம் என்பது இன்பம் பற்றியது. பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. கணவன் மனைவியுடன் வாழும் குடும்பம் பற்றியது. புற ஒழுக்கம் என்பது பிறருக்கு எடுத்துரைக்கும் தன்மையது. அறம், பொருள் பற்றியது. மக்கட் சமுதாயம் அல்லது அரசு பற்றியது. இச்சிறப்போடு தமிழ்மொழி, இயல், இசை, நாடகம் என முத்திறப்பட்டு, முத்தமிழ் எனவும் போற்றப்பெறும் சிறப்பினது.

முத்தமிழ் விளக்கம்:

இச்செந்தமிழ் மொழியை முத்திறப்படுத்தறிவித்த மேதைமை தமிழர்கட்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். வேறு பல மொழிகளிலும் இம்முக்கூறு இருந்தபோதிலும் அதை நுண்ணிதின் உணர்ந்து வெளிப்படுத்தினார் இல்லை.

இயல் என்பது உள்ளத்தே இயல்பாக எழும் எண்ணங்கள். அஃதாவது கருத்துக்கள். கருத்தே அறிவு எனப்படுகிறது. எனவே அறிவு இயற்றமிழ் எனப்படுகிறது. வரலாறு, பூகோளம், வானியல், தத்துவம் என, அறிவு பல திறப்படும் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வறிவிற்கெல்லாம் பிறப்பிடம் மனமே. எனவே மனமும், மனத்துள் நின்று எழும் எண்ணங்களாகிய கருத்துக்களும் இயற்றமிழ் எனப்பெறுகின்றன.

எண்ணங்களாகிய கருத்துக்களுக்கு மனம் இருப்பிடமாக இருக்கிறதே தவிர தன்னிடம் தோன்றிய கருத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. இதனால்தான், இயற்றமிழ், ஊமை எனப் பேசப்பெறுகிறது. இதுபோன்றே எல்லா உலகிற்கும் முதலாய் இருக்கின்ற 'ஓம்' என்ற பிரணவம், ஊமை எழுத்து என்று சாத்திரம் பேசும். "முதலாய் இருப்பதெல்லாம் மோனமாயிருப்பதே முறைமை போலும்"

பழந்தமிழ் இலக்கியங்களில், முத்தமிழ் என்று தமிழைக்குறிப்பிட்டவர் நம் அப்பர் அடிகளேயாவார். "மூலநோய் தீர்க்கும்முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" (தி.6 ப.23பா.9) (மூலநோய் - பிறவிநோய்) என்பது அவர்தம் அருள்வாக்கு. தமிழரைத்தமிழன் என்று பழம்பெரும் இலக்கியங்களில் சொல்லிய சிறப்பும் அப்பர்அடிகளையே சேரும். "ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையெம் அண்ணல் கண்டாய்" (தி.6 ப.23 பா.5) என்னும் திருமறைக்காட்டுத் திருத்தாண்டகப் பகுதி இதனை வலியுறுத்தும்.

திருநாவுக்கரசர் இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் பாடல்களை அருளியுள்ளார். திருஞானசம்பந்தர் தாம் பாடியருளிய மூன்று திருமுறைகளையும் பண் அமைப்பிலேயே இசைத்தமிழாகவே பாடியுள்ளார். மூன்று திருமுறைகளிலுமாகச் சம்பந்தர் 22 பண்கள் பொருந்திவரப் பாடல்கள் பாடியுள்ளார். அதனால்தான் அவரைப் போற்றிய சுந்தரர், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" (தி.7 ப.62 பா.8) என்றுகுறித்தார்.