இசைத்தமிழும் இயற்றமிழும்: திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறைப் பதிகங்கள்அனைத்தும் பண் அமைப்புடையன. இசைத்தமிழ்ப் பாடல்களாகப் பத்துப் பண்கள் அத்திருமுறையில் காணப்பெறுகின்றன. ஐந்தாம் திருமுறை "குறுந்தொகை" என்னும் யாப்பு அமைப்பிலும், ஆறாம் திருமுறை "தாண்டகம்" என்னும் யாப்பமைப்பிலும் அமைந்துள்ளன. எனவே அப்பர் அருளிய நான்காம் திருமுறை "இசைத்தமிழ்" எனவும், ஐந்து, ஆறாம் திருமுறைகள் "இயற்றமிழ்" எனவும் குறித்து உணரலாம். இயற்றமிழாயினும் தொன்றுதொட்டு, ஐந்தாம்திருமுறை ரூபக தாளத்தில், நாதநாமக்கிரியா இராகத்திலும், மாயாமாளவ கௌளஇராகத்திலும் பாடி வருகின்றனர். ஆறாந்திருமுறையான திருத்தாண்டகத்தைச் சுத்தாங்கமாக அரிகாம்போதியில் பாடி வருகின்றனர். தாண்டக வேந்தர்: தாண்டகம் என்னும் யாப்புக் குறித்த இலக்கணம், பன்னிருபாட்டியல், யாப்பருங்கலவிருத்தி என்னும் இலக்கண நூல்களில் விளங்கக்காணலாம். ஒவ்வொரு அடியிலும், அறுசீர் அல்லது எண்சீர் அமைய, ஆடவர் அல்லது கடவுளரை நான்கு அடியால் போற்றிப் பாடுவது தாண்டகத்தின் இலக்கணம்.அவற்றுள் அறுசீர்களில் அமைவது குறுந்தாண்டகம். எண்சீரால் அமைவது நெடுந்தாண்டகம். இதனைப் பன்னிருபாட்டியல், "மூவிரண் டேனும் இருநான்கேனும், சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர், கடவுளர்ப் புகழ்வன தாண்டகம்,அவற்றுள், அறுசீர் குறியது, நெடியதுஎண் சீராம்" என்று கூறுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில், முதன்முதல், தாண்டக யாப்பில்பாடல்களை அருளியவர் அப்பர் சுவாமிகளேயாவார். அதனால் அப்பரைத்" தாண்டகச் சதுரர்" என்று சேக்கிழார் சுவாமிகள் போற்றுகின்றார்."தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அலர்புகழ் அரசும்கூட அங்கெழுந்து அருளக்கண்டு" (தி.12-குங்-32) என்பது பெரியபுராணப் பாடல்பகுதி. இந்நிகழ்ச்சி திருக்கடவூரில் குங்குலியக் கலயர் திருமடத்தில் அப்பரும்சம்பந்தரும் எழுந்தருளியிருந்ததைக் குறிக்குமிடத்துச் சேக்கிழார்குறிப்பிட்டு உள்ளார். தாண்டக யாப்பிற்குத் தந்தையாக இலங்கும் அப்பர் அடிகளைப் பின்னே வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசரும், நால்வர்நான்மணிமாலையில் "தாண்டகவேந்த" என்று விளித்துப்போற்றுகிறார். "வெள்ளேறு உடையான் தனக்கு அன்புசெய் திருத்தாண்டகவேந்த" (பா.6) என்பது அவர்தம் அருள் வாக்கு.
|