ஆறாம் திருமுறை: ஆறாம் திருமுறையில் 99 திருத்தாண்டகப் பதிகங்களும், 65 திருத்தலங்களும் இடம்பெற்றுள்ளன. ஆறாம் திருமுறையில் உள்ள திருப்பதிகங்கள் அனைத்தும் நெடுந்தாண்டக அமைப்பைச் சேர்ந்தன. சிவசம்பந்தப்பட்டமையால் திருவைச் சேர்த்து, திருத்தாண்டகம் என்று வழங்கப்பெறுகிறது. முன் ஏழும், பின் எட்டும் சிறப்புத் தலைப்புள்ளன: முதலில் உள்ள ஏழு திருப்பதிகங்களில் முன் உள்ள "அரியானை அந்தணர் தம் சிந்தையானை" (தி.6 ப.1 பா.1) என்ற பதிகமும், இரண்டாவதாகவுள்ள "மங்குல்மதி தவழும் மாடவீதி" (தி.6 ப.2 பா.1) என்றபதிகமும் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றவை. இருப்பினும் இவ்விரு திருப்பதிகங்கட்கும் தலைப்பில் "அரியானை" என்பதில் "பெரியதிருத்தாண்டகம்" என்றும், "மங்குல்மதி" என்பதில் "புக்கதிருத்தாண்டகம்" என்றும் பெரியோர் குறித்துள்ளனர். 1. பெரிய திருத்தாண்டகம்: பெரிய திருத்தாண்டகம் என்பதற்கு "நெடுந்தாண்டகம்" என்பதையே இப்பெயரிட்டுக் குறித்துள்ளனர் என்று கொள்ளலாம். ஆறாம்திருமுறை முழுவதுமே நெடுந்தாண்டகமாகத்தான் அமைந்துள்ளது. மேலும் இப்பதிகமுதல் பாடலில் "பெரியானை" என்றும், "பெரும்பற்றப் புலியூரானை" என்றும், பின்னர், பெருமானை, பெருந்தகையை, பெருந்துணையை, பெரும்பொருளை, பெரும்பயனை, பேரொளியை என்றும் குறிக்கப்பெறுதலால் இப்பெயர் பெற்றதெனக் கொள்ளலாம். மேலும், உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரியவன் ஆதலின், இங்ஙனம் குறிப்பிட்டுள்ளார் என்பதும் கொள்ளத்தகும். 2. புக்க திருத்தாண்டகம்: தில்லையில் பாடியருளிய இரண்டாம் திருப்பதிகம்,"மங்குல் மதிதவழும்" என்பது. இதைப் "புக்க திருத்தாண்டகம்" எனப் போற்றியுள்ளனர். இறைவன் மற்றைய தலங்களைக் காட்டிலும் இத்தலத்தில் சிறப்பாக விளங்குதல் பற்றியும், பாடல்தோறும் புலியூர்ச்சிற்றம்பலமே புக்கார்தாமே என்றமையாலும் புக்க திருத்தாண்டகம் எனப்பெயர் பெற்றுள்ளது. மேலும் இறைநெறிக் கலைகள் அனைத்தும் அர்த்தயாமத்தில்தில்லையில் ஒடுங்குவதாகக் குறிப்பிடப்படுவதாலும் இப்பெயர் பெற்றதுஎனலாம். புக்கது - புகுந்தது. 3. ஏழைத் திருத்தாண்டகம்: மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய ஐந்து பதிகங்களும் திருவதிகையில் பாடப்பெற்றன. மூன்றாவதாக உள்ள "ஏழைத்
|