திருத்தாண்டகம்" திருவதிகையில் பாடப்பெற்றது. ஏழை என்பது, செல்வமின்மை, வலிமை இன்மை, அறிவின்மை முதலியவற்றைக் குறிக்கும். இங்குநாயனார் அறிவில் ஏழையாகவே தம்மைக் குறிப்பிட்டுள்ளார். நம்பர் அருளாமையினாலும், சமண சமயம் சார்ந்திருந்தபோது அறிவுத்தெளிவின்றி இருந்தமையாலும், இருபிறப்பும் வெறுவியராய் இருந்தாராகிய சமணர்சொற்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே (தி.6 ப.3) என்று பதிகம்முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிப்பிடலாலும் இத்திருப்பதிகம் இப்பெயர் பெற்றது. இரவும் பகலும் பிரியாது வணங்குவன், நெஞ்சம் உமக்கேஇடமாக வைத்தேன், சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்பனவெல்லாம் அப்பர்சைவம் சார்ந்தபிறகே என்பது இப்பதிகத்தாலும் வலியுறுத்தப்பெறுதல் காணலாம். 4. அடையாளத் திருத்தாண்டகம்: நான்காவதாக "அடையாளத் திருத்தாண்டகம்". எல்லாப் பாடல்களிலும் இறைவனிடத்துள்ள சந்திரன், கங்கை, சடாமகுடம் முதலிய அடையாளங்களைப் பதிகம் முழுவதும் குறிப்பிட்டிருத்தலின் இப்பெயர் பெற்றுள்ளது. 5. போற்றித் திருத்தாண்டகம்: ஐந்தாவது, பெருமான் புகழைப் பல படியாகப் பதிகம் முழுவதும் போற்றி, போற்றி என்று பலமுறை அருளப் பெற்றிருத்தலின் "போற்றித்திருத்தாண்டகம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர். இதில் 82 போற்றிகள் வருகின்றன1. 6. திருவடித் திருத்தாண்டகம்: ஆறாவதாக, "திருவடித் திருத்தாண்டகம்"அமைந்துள்ளது. இறைவன் திருவடியே எல்லாவற்றையும் இயக்குகிறது என்றகுறிப்பில், அவன் திருவடிச் சிறப்பைப் பாடல்தோறும் பல படியாகக் குறிப்பிட்டிருத்தலின், இப்பயர் பெற்றுள்ளது. பின் வந்துள்ள திருவடிப்புகழ்ச்சிகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது இத்தாண்டகப் பதிகமே என்பது குறிப்பிடத்தக்கது.
1 மேலும் திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகம்,திருக்கயிலைப் போற்றித் திருத்தாண்டகம், திருவாசகத்தில் சிவபுராணப்பகுதி, போற்றித் திரு அகவல்பகுதி மற்றும் பன்னிருதிருமுறைகளிலும் உள்ள போற்றிகளைத் தொகுத்தால் 1008 போற்றிகள் கிடைக்கும். இவற்றை ஒரு முறை சொல்லி மலர் தூவி வழிபட்டால் சகஸ்ர நாமஅர்ச்சனையாகவும், இதையே நூறு முறை ஓதி வழிபட்டால் இலட்சார்ச்சனையாகவும்,அவற்றை நூறு இலட்சம் முறை ஓதினால் ஒரு கோடி அர்ச்சனையாகவும் கொள்ளலாம்.வழிபட்டு வளமுறுவோம்.
|