சாக்கிய நாயனார்: 1 இவர் திருச்சங்க மங்கை கிராமத்தில் வேளாளர் குலத்துதித்து நன்ஞானம் அடைவதற்குரியவழியை நாடுவாராய்க் காஞ்சியை அடைந்தார். அங்கு சாக்கியர்தம் அருங்கலைநூல் ஓதி, அகச்சமயங்களும், புறச்சமயங்களும் பொருளில்லை என உணர்ந்து, சிவநன் னெறியே பொருளாவது என்றுணர்ந்தார். 'எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்' என்றுணர்ந்து சிவத்தை மறவாது, தான்கொண்ட வேடத்தைத் துறக்காமல் சிவலிங்கம் கண்ட பின்னரே உண்ணுவது என்ற முடிவில் சிவலிங்கம் கண்டு யாது செய்வதென அறியாது பக்கத்திருந்த கல்லை எடுத்து எறிந்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாது செய்து வரும் நாளில் ஒருநாள் மறந்து உண்ண முற்பட்டவர் நினைந்து கல்லெடுத்து எறிந்து முத்தியெய்தியவர். இவரது வரலாற்றில் சேக்கிழார் இந்நிகழ்ச்சியை, கல்லாலே எறிந்ததுவும் அன்பான படிகானில் | வில்வேடர் செருப்படியுந் திருமுடியின் மேவிற்றால் | நல்லார்மற் றவர் செய்கை அன்பாலே நயந்ததனை | அல்லாதார் கல்லென்பார் அரனார்க்கஃ தலராமால் | (தி.12 சாக்கியர் புரா. 14) |
என்று குறிப்பிடுகிறார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகத்தில், "கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணும் சாக்கிய னார் | நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார்" | (தி.4. ப.49. பா.6) |
என்றும், திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் "புத்தன் மறவாதோடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான்காண்" (தி.6. ப.52 பா.8) என்றும் குறிப்பிடுதல் காண்க. திருஞானசம்பந்தர்: 2 சைவசமயாசாரியர்களுள் முதல்வராகிய இவ்வருளாளர் சோழநாட்டில் சீகாழியில் கௌணியர் குலத்தில் சிவபாத இருதயருக்கு மகவாக அவதரித்தார்.
1, 2 தி.12 பெரியபுராணம்.
|