பக்கம் எண் :

162
 

தமது, மூன்றாவது வயதில் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்ற தந்தையாருடன் சென்று அங்கு நீரில் அகமருஷண ஜபம் செய்யும் தந்தையைக்காணாது அழுதார்.

உயிர்த்தந்தையாகிய பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருளி சிவஞானத்துடன் திருமுலைப்பால் ஊட்டச் செய்தார்.

தந்தையார் நீராடி வந்து யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்? எனக் கோல்கொண்டு ஓச்சிவினவ "தோடுடைய செவியன்" என்னும் திருப்பதிகம் பாடித் தமக்குப் பால் கொடுத்தருளிய பெருமானைச் சுட்டிக் காட்டினார்.

அதுமுதல் பல தலங்களுக்கும் சென்று திருப்பதிகம் பாடிப்பரவிபல அருட்செயல்கள் புரிந்தார்.

திருவீழிமிழலையில் பஞ்சம் ஏற்பட்டபோது அடியார் துயர்துடைக்கத் திருவுளங்கொண்ட பெருமான் திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்தர் இருவருக்கும் படிக்காசு அருளினார்.

சம்பந்தர்க்கு அளித்த காசு வாசியுடைய தாயிருக்க "வாசிதீரவே காசு நல்குவீர்" என்ற திருப்பதிகம்பாடி வாசியில்லாக்காசு பெற்றார்.

இந்நிகழ்ச்சியைத் திருவாய்மூர்த் திருப்பதிகத்தில் "பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு, வாடிவாட்டந் தவிர்ப்பாரவரைப்போல்" (தி.5 ப.50 பா.7) என்றும் திருவாய்மூரில் பெருமான் காட்சி கொடுத்ததை,

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய் மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

(தி.5 ப.50 பா.58)

என்றும் குறித்துப்பாடியுள்ளார்.

மேலும் சிவபாத இருதயர் வேள்விக்காகத் திருவாவடுதுறையில் பொன்வேண்டிப் பெற்றார் ஞானசம்பந்தர். அந்நிகழ்ச்சியைச் சுவாமிகள்,