பக்கம் எண் :

164
 

முடிவுரை:

நம் தமிழ்நாட்டில் தத்துவக் கருத்துக்களைப் பரப்ப எழுந்தனவே புராணங்கள் என்று கூறலாம். அவை எளிய மக்களும் படித்து இன்புறும் வகையில் அமைந்துள்ளன. அதனால் அவற்றைப் படிப்பவர்கள் தத்துவக் கருத்துக்களை அறிவதோடு கடவுளுணர்ச்சியையும் இனிது பெறுகிறார்கள்.

அத்தகைய புராணக் கருத்துக்களையும் நாயன்மார் வரலாறுகளையும், அப்பர் சுவாமிகள் தமது அநுபவத்தின் பிழிவாக எழுந்த தோத்திரப் பாமாலையாகிய தேவாரத் திருப்பதிகங்களுள் ஆங்காங்கு எடுத்துக் கூறியருளிப் பொருள் விளக்கம் புரிந்துள்ளார்கள்.

அதனால் அத் தேவாரத் திருப்பதிகங்கள் ஒட்பமும் திட்பமும் நுட்பமும் உடையவை யாய்த் திகழ்கின்றன.

அப்பர் சுவாமிகள் கூறியருளிய சில நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்கள் இக்கட்டுரையில் நம் சிந்தனைக்குரியவாயின.

அந் நாயன்மார் வரலாறுகளையும், தேவாரத் திருப் பதிகங்களையும் படித்து அவற்றிலுள்ள தத்துவக் கருத்துக்களை அறிந்து, கடவுளுணர்வைப் பெற்று உய்தல் அனைவர்க்கும் உரியதாயினும், இறைவன் பொருள்சேர் புகழையே இனிது விளக்கும் இக்குறிப்புக்களினூடே இலங்கும் திருவருட் பெற்றியறிந்து தெளிவு பெறல் கற்றறிந்த மாந்தர் கடனாகும்.