மாணிக்கவாசகர், சேக்கிழார் என்னும் நாயன்மார்களும், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் சந்தான குரவர்களும், இரணியவர்மர், சேந்தனார், பெற்றான் சாம்பானார், என்னும் அடியார்களும் வழிபட்டு, முத்திபெற்ற தலம். மாணிக்கவாசகப்பெருந்தகையார் புத்தரைவாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேசுவித்து, சைவ சமயமே மெய்ச்சமயம் என்பதை நிலை நாட்டியது; நம்பியாண்டார் நம்பி கனகசபையின் மேல்பால் உள்ள அறை ஒன்றில் தேவாரங்களைக் கண்டருளியது; தெய்வப்பாக்கிழாராகிய சேக்கிழார் திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணத்தை எழுதி அரங்கேற்றியது; உமாபதிசிவம் பெற்றான் சாம்பானார்க்கும், முள்ளிச் செடிக்கும் முத்திகொடுத்தருளியது; திருஞானசம்பந்தப் பெருந்தகை தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாய்க் கண்டது; சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேரூர்ப்பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கண்டு வணங்கியது; என்பனவும் பிறவும் இத்தலத்தில் நிகழ்ந்த அரிய விசேடங்களாகும். ஈசர்க்கேற்ற பரிசினால், அவரை அருச்சித்து அருள, பூசைக்கமர்ந்த பெருங் கூத்தர், தம்முடைய பொற்பார் சிலம்பின் ஒலியை எந்நாளும் அளிக்கக் கேட்டு உவக்கும் பேறுற்ற சேரமான் பெருமாள் நாயனாருக்குச் சிலம்பொலி கேட்கத் தாழ்ப்பித்து, பொன்வண்ணத்து அந்தாதியைப் பெற்றதும் ஆகிய அருட் செயல்களுடன், ஆடகப்பொதுவில் நாடகம் இயற்றும் ஏடவிழ் கூந்தல் இறைவி பாகனது பெருமையை யாவரால் எடுத்து இயம்ப இயலும்? தேவாரப் பதிகம் பதினொன்றும், திருவாசகப் பதிகம் இருபத்தைந்தும், திருக்கோவையாரும், திருவிசைப்பாப் பதிகம் பதினைந்தும், திருப்பல்லாண்டும், பத்தாம் திருமுறையில் சிலதிருமந்திரங்களும், பதினொன்றாம் திருமுறையில் கோயில் நான் மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தங்களும் பெரிய புராணமும் ஆகப் பல அருட் பனுவல்கள் இத்தலத்திற்கு உள்ளன. இவைகளன்றிக் கோயிற்புராணம், சிதம்பர புராணம், சபா நடேச புராணம் என்னும் புராணங்கள் தமிழிலும், சூதசம்கிதை, சிதம்பர மான்மியம், புண்டரீகபுர மான்மியம், வியாக்கிரபுர மான்மியம் முதலான நூல்கள் வடமொழியிலும் இருக்கின்றன. இவைகளேயன்றி, குமரகுருபர அடிகளால் ஆக்கப்பெற்ற சிதம்பரம் மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை; இரட்டைப் புலவர்களால் பாடப்பெற்ற தில்லைக் கலம்பகம் என்னும் நூல்களும் இத்தலத்திற்கு உரியனவாகும். 
 |