8. திருவாலம்பொழில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பூந்துருத்திக்கு மேற்கில் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறைவர்: ஆத்மநாதேசுவரர். இறைவி: ஞானாம்பிகை. இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியை உடையது. அஷ்டவசுக்களால் வழிபடப்பெற்றது. கல்வெட்டு: இதிலுள்ள கல்வெட்டுக்கள் சிதைந்துள்ளன. அவைகளை அரசாங்கத்தார் படியெத்து ஆண்டு அறிக்கையில் வெளியிட்டிலர். அக்கல்வெட்டுக்களைப் படித்துப் பார்த்த பொழுது அவைகளில் இறைவர் தென்பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய மகாதேவர் எனக் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூர்த் திருத்தாண்டகத்திலும் 'தென்பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே' எனப் பாடப்பெற்றிருக்கின்றது. இத்திருவாலம்பொழிலுக்குத் தெற்கே வெள்ளான்பிரம்பூர், தென்பிரம்பூர் என்னும் ஊர்கள் இருக்கின்றன. 9. திருஆலவாய் இது மதுரைக்கு உரிய வேறு பெயராகும். வம்மிசசேகர பாண்டியன் ஆட்சிசெய்து வருங்காலத்தில் மக்கள் வசிப்பதற்கு இடம் போதாமையால், ஆதியில் இந்நகரத்திற்கு ஏற்பட்ட எல்லையைக் காட்டியருளுமாறு அவன் சிவபெருமானை வேண்டினான். பெருமானும் தனது திருக்கையில் கங்கணமாயுள்ள பாம்பை அளந்து காட்டுமாறு பணிக்க, அது வாலும் வாயும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைத்துக் காட்டியமையால் இப்பெயர்பெற்றது. இதற்குரிய வேறுபெயர்கள் நான்மாடக்கூடல், மதுரை, கடம்பவனம், பூலோக கயிலாயம், சிவராசதானி, துவாதசாந்தத் தலம் என்பன.
|