மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3/4.கி.மீ. தூரத்தில், வையையாற்றின் தென்கரையில் இருக்கிறது. தமிழகத்துப் பெருநகர்கள் பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் மதுரை செல்லலாம். பாண்டியநாட்டுத்தேவாரம் பெற்ற தலங்கள் பதினான்கில் முதன்மை பெற்றது. இறைவரின் திருப்பெயர் சொக்கலிங்கப்பெருமான். இறைவியாரின் திருப்பெயர் அங்கயற்கண்ணி. இத்திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் "அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவாயாவது மிதுவே" என எடுத்தாண்டி ருப்பது மகிழ்தற்குரியது. வடமொழியில் மீனாட்சிதேவி என்பர். தலவிருட்சம் கடம்பு. தீர்த்தம் பொற்றாமரை, வையை ஆறு, எழுகடல். 'பாண்டிநாடே பழம்பதி' என்று சிறப்பித்து ஓதப்பெறும் மதுரை, பாண்டிநாட்டில் பாண்டிய மன்னர்களுக்குத் தலைநகராக விளங்குவது மதுரை. புலமைமிக்க புலவர் பெருமக்கள் பலர் இருந்து தமிழ் மொழியை ஆராய்ச்சிசெய்ய நிலைக்களமானது. சங்கப்பனுவலாகிய பரிபாடலில், மதுரைக்கும் வையைக்கும் முப்பது பாடல்களைக் காணலாம். இங்குச் சிவபெருமான் செய்தருளிய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைப்போல வேறு எங்கும் நிகழ்ந்திலது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களுடைய பதினொரு பதிகங்களைக் கொண்டது. திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அனல்வாதம் புனல்வாதம் செய்து சைவத்தைப் பாண்டிநாட்டில் நிலை பெறச்செய்த பதி. முத்திதரும் தலங்கள் ஏழனுள் ஒன்றாய் விளங்குவது. ஐந்து சபைகளுள் வெள்ளியம் பலத்தைக் கொண்டது. மூர்த்தி நாயனார் அவதரித்த திருப்பதி. மாணிக்கவாசகரது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு அறிவுறுத்தி அவனை உய்விக்கச் செய்வதற்காக, நரி பரி ஆக்கியது, பரி நரியாக்கியது முதலான திரு விளையாடல்களைச் செய்தருளிய தலம். 1. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: இது வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப்பெறும். இது ஆராய்ச்சிக்குச் சிறந்த நூல். இதை ஆக்கியோர் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியாவர்.
|