திருவுளங்கொண்டதாகத் தோன்றுகின்றது. இக்கருத்தைத்தான் "பையவே சென்று பாண்டியற்காகவே" என்ற அவரது தேவாரப் பகுதியும் தெரிவிக் கின்றது. மங்கையர்க்கரசியார் திருநீறு அணிந்திருந்த செய்தி "முத்தின் தாழ்வடமுஞ் சந்தனக்குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி" என்னும் ஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. நுணுகி ஆராயின் இவைபோன்ற பல உயரிய செய்திகளை இத்தலத்துத் தேவாரப் பதிகங்களால் அறியலாம். 10. திருஆவடுதுறை திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினர். அவர் அப் பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ் வடிவம் நீங்கப்பெற்றனர் என்னும் காரணம் பற்றி இப்பெயர் பெற்றது என்பர். இது நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் கிழக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் முப்பத்தாறாவது தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து வழியில் திருவாலங்காட்டை அடுத்துள்ளது. பிள்ளையார் 1. துணைவந்தபிள்ளையார். 2. அழகிய பிள்ளையார். இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீசுரர். இவரே கர்ப்பஇல்லில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்தநாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர். திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. செம்பொன் தியாகர்: முசுகுந்தச்சக்கரவர்த்திக்கு இறைவர் திருவாரூர்த் தியாகராசராகக் காட்சி காட்டியருளியமையால் இவர்க்கு இங்கே தனிச் சந்நிதி இருக்கிறது. இவர் வீரசிங்காதனம் உடையவர். இவரது நடனம் சுந்தர நடனம். திருவிழாக்காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர் இவரேயாவர். இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் 'ஒப்பிலா முலையாள் ஒரு பாகா" என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம்,
|