அடும் அரிசி முக்கலமும் திருவோணத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி இருகலமும், பன்மாகேசுவரர்களுக்கு அடும் அரிசி ஆறுகலமும், அவிட்டத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி முக்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி ஏழுகலமும், சதயத்தன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி நாற்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி எண்கலமும், தீர்த்தமாடும் பூரட்டாதி ஞான்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி ஐங்கலமும் பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி பன்னிருகலமும் ஆக இவ் ஏழு நாளும் அடக்கடவ அரிசி ஐம்பத்திருகலமும்' என்னும் மிறைக்கூற்றத்து, வீரமாங்குடி உடையான் தாயங்காடன் என்பவன், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் முப்பத்தாறாம் ஆண்டில் இவ் விழாவிற்கு வரும் சிவயோகிகளுக்கும், பன்மாகேசுவரர்களுக்கும் ஊட்டூட்டின் பொருட்டு சிறுபுலியூரிலும், சிற்றானைக்சூரிலும் நில நிவந்தம் அளித்துள்ள கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இவ்விழா முடிவுநாளாகிய புரட்டாசிப் பூரட்டாதிநாளில் திருமூல நாயனாரது நாடகமும் ஆரியக்கூத்து ஏழு அங்கமும் நடத்தப்பெற்று வந்தன. இச்செய்தி இக்கோயில் கர்ப்ப இல்லின் மேற்குப்புறச் சுவரில் உள்ள, முதலாம் இராஜராஜசோழதேவரது ஒன்பதாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டினால் புலப்படுகின்றது. மகாமண்டபத்தைக் கட்டியவன்: இம் மகாமண்டபத்தைக் கட்டியவன் இளங்காரிகுடையான் சங்கரதேவன் ஆவன். இத் திருப்பணிக்குத் திருவெண்காடு உடையான் அனங்கனும் உதவி செய்துள்ளான். இவைகளை இம் மண்டபத்தின் உள்பக்கத்தில் இருக்கும் தூண் ஒன்றில் "ஸ்வதிஸ்ரீ இத்திருமண்டபம் இளங்காரிமுடையான் சங்கர தேவன்" என்னும் கல்வெட்டாலும்; இம் மகாமண்டபத்தின் தென்பக்கமுள்ள ஒரு தூணின் போதியக்கட்டையில் உள்ள, "இக்கல் திருவெண்காடு உடையான் அனங்கன் திருப்பணி" என்னும் கல்வெட்டாலும் அறியலாம். திருமடங்கள்: இவ்வூரில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீல விடங்கன் மடம், திருவீதி மடம், நாற்பத்தெண்ணாயிரவர் மடம் என்னும் பெயருள்ள திருமடங்கள் இருந்தன.
|