அனபாய சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை கண்டியூரிலும் நிலம் இருத்தாறுவேலியும் ஆக நிலம் அறுபதிற்று வேலியைக் கொடுத்திருந்தான். மேற்குறித்த இவைகளன்றித் திருவாவடுதுறை ஆழ்வார்க்கு சங்கிராந்திதோறும் முக்குறுணி நெல்லின் அரிசியால் அமுது செய்விப்பதற்கும், இரண்டு அயன சங்கிராந்திக்கும் நூற்றெட்டு கலசத்தில் ஸ்நபனம் செய்விக்கவும் வடகரை தேவதானம் கார்நாட்டுத் தனிக்கடம்பூர் உடையான் கண்ணி புலியூர் நக்கர் அளித்த எண்கழஞ்சு பொன் கொண்டு மூன்றுமா நிலம் வாங்கி அளிக்கப் பெற்றிருந்தது. இவைபோன்று அளிக்கப்பெற்ற நில நிவந்தங்கள் பலவாகும். (ஸ்நபனம் - திருமஞ்சனம்). வைத்தியத்திற்கு அளிக்கப்பெற்ற நிவந்தம்: உய்யக் கொண்டார் வளநாட்டு சோழேந்திரசிங்கமலத்து சவர்னன் அரையன் சங்கரனான உத்தமசோழ அசலரையனுக்கும் அவன் வம்சத்தார்க்கும் திருவாவடுதுறையில் வைத்யஞ் செய்து கொண்டு உண்ணும் பொருட்டு, ஆழ்வார் ஸ்ரீ பராந்தக ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார் இராஜேந்திரசிம்ம வளநாட்டு இன்னம்பர்நாட்டுப் பழையவானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடத்தில் நூற்று இருபது காசு கொடுத்து நிலம் எட்டுமாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் குழி ஒன்றும் மனை இரண்டும் வாங்கி அளித்துள்ளனர். இந்நிகழ்ச்சி முதலாம் இராஜேந்திரசோழனது நான்காம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். திருவாவடுதுறை என்பது ஊரின் பெயரா? அல்லதுகோயிலின்பெயரா? திருவாவடுதுறைக் கல்வெட்டுக்களில் "சாத்தனூர் பிர்ம தேயம் ஸ்ரீய் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ திருவாவடுதறை உடையார் கோயில் தென்கரை திரைமூர்நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை உடைய ஆழ்வார்க்கு", எனக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பின்னதைப்பற்றிக் கல்வெட்டுத் துறையாளர் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டபொழுது, "Thiruvavaduthuari at Sattanur" என எழுதியுள்ளனர். இவ் ஆங்கில மொழி பெயர்ப்பைக் கொண்டு ஊரின் பெயர் சாத்தனூர். அங்குள்ள கோயிலின் பெயர் திருவாவடுதுறை எனக் கூறுவாருமுளர். அது பொருந்தவது அன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐயன்பேட்டை என்னும் பெயருடைய ஊர்கள் மூன்று இருக்கின்றன. அவைகளை மக்கள் குறிப்பிடும்பொழுது வழுத்தூர்ஐயன்பேட்டை, மனைக்கால் ஐயன்பேட்டை, காட்டூர் ஐயன்பேட்டை
|