தலைப்படி குலையரையர்' என்பவர் ஒரு சபையினர் என்பது உறுதி, அவர்கள் எவ்வேலையைக் கண்காணித்துவந்தனர் என்பது புலப்படவில்லை. இக்கோயிலிலுள்ள பொன் ஆபரணங்கள் குடிஞைக் கல்லாலும், வெண்கல உருக்கள் வெள்ளிக் கோலாலும், பித்தளை உருக்கள் மாண்டினாலும் நிறுக்கபெற்று வந்தன. "வெள்ளிக் கோலால் நிறை ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்பலவரை, மேற்படி கோலால் நிறை தொளாயிரத்திருபத்தைம்பலநே கைசு (கஃசு)" என்னும் தொடர்களால் அக்காலத்தில் பலம் தான் உயர்ந்த நிறுத்தல் அளவை என்பதும் கஃசுதான் மிகச் சிறியது என்பதும் பெறப்படுகின்றன. கோயில்காரியங்களின் பொருட்டு ஊர்ச்சபையார், திருவாவடுதுறை உடையார் கோயில் வட பக்கத்து உலகளந்தான் என்று பேர் கூவப்பட்ட மாடத்தில் கூட்டங் குறைவறக் கூடியிருந்தும், சங்கரதேவன் மண்டபத்தே கூட்டங் குறைவறக் கூடியிருந்தும் கவனித்து வந்தனர். சாத்தனூர்க்கு ஸ்ரீ சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் வழங்கி வந்ததாக முதலாம் இராஜேந்திர சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இந்த ஸ்ரீ சதுர்வேதிமங்கலத்துக்கு வடக்கில் சிற்றானைச்சூர் என்னும் ஊர் இருந்தது. 11. திருஆனைக்கா யானை பூசித்துப்பேறு எய்தியதால் இப்பெயர் பெற்றது. திருவானைக்கா திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வடகரையில் விளங்கும் தலம். திருச்சிராப்பள்ளியிலிருந்து நகரப் பேருந்துகள் பல உள்ளன. இறைவரின் திருப்பெயர்: நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர்பெருந்தகையார் "செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே" என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஐம்பு - நாவல்) இறைவியாரின் திருப்பெயர்: அகிலாண்டநாயகி. தலவிருட்சம் வெண்ணாவல்.
|