இவைபோன்று ஹொய்சல அரசர்களின் வரலாறுகள் பலவற்றை அறிதற்கு இக்கோயில் ஒரு சிறந்த பொக்கிஷமாக விளங்குகின்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நாள் ஆவணி மாதத்து அவிட்டமாகும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I பிறந்தநாள் சித்திரை மாதத்து மூலநட்சத்திரமாகும். இச்செய்திகளை இவர்கள் இத்திருவானைக்கா கோயிலுக்கு அளித்துள்ள நிபந்தங்கள் அறிவுறுத்துகின்றன. சோழமன்னர்கள் இக்கோயிலைப் பெரிதும் போற்றி வந்தனர். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் (இவனே இக்கல்வெட்டில் கோனேரின்மை கொண்டான்) என்பவன் நித்த விநோத வளநாட்டு வில்லவநல்லூரில் இருபத்தைந்து வேலி நிலத்தைத் தன் அத்தையாகிய திருப்பெரிய தேவியார் பேரால் திருவானைக்காவுடைய சிவபெருமானுக்குத் திருநாமத்துக்காணியாக இறையிலி செய்து கொடுத்துள்ளான். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது காவலாளிகள் இருந்தனர் என அறிகின்றோம். இக்கல்வெட்டில் பிணைத்தீட்டு (ஜாமீன்) என்ற பெயர் உளது. மகாதேவ தீட்சிதர் மகன் சதாசிவ மகின் (தீட்சிதர்) காவை நூல்கள் எனப் பல எழுதினார். திருவானைக்காவிலுள்ள நஞ்சை நிலங்களை அளந்தகோல் சிவநாமத்திரேயம் என்னும் பெயர் பூண்டதாய் நான்கு அடி நீளமுள்ளதாய் இருந்தது. அகிலாண்ட ஈஸ்வரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர். தோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் என்னும் பெயரும் பட்டன் ஒருவனுக்கு என்னானைக் கன்று என்ற பெயரும் வைக்கப் பெற்றிருந்தன. என்னானைக் கன்று என்னும் பெயர் இவ்வூர்த் திருத் தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது. விஜயரங்க சொக்கநாத நாயகருடைய நாடகசாலை ஆசிரியர் வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள் கட்டியுள்ளார்.
1 திருவானைக்கா, திருவாவடுதுறை ஆதீனவெளியீடு.
|