முதற் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தென்கரை, திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில் எனவும், முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் உலகுய்யக் கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர் எனவும் குறிப்பிடுகின்றன. முதற் பராந்தகசோழன் காலத்தில் அளிக்கப்பட்டவை:- திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு மார்கழித் திருவாதிரை தோறும் நெய்யாடி அருளுதற்குத் தொண்டை நாட்டு, செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு் இடும்பேட்டைப் பண்டாரிகிழான் கொட்டி என்பான் பதின்கழஞ்சு பொன் கொடுத்திருந்தான். மூலஸ்தானத்து மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கினுக்குப் புலியூர்க் கோட்டத்து மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன் இருபத்தைந்து கழஞ்சு பொன்னை உதவியிருந்தான். இருமடிச் சோழப் பல்லவரையர் திருவிடைமருதுடையார்க்குத் திருமெய்ப் பூச்சுச் சந்தனத்திற்கும். சீதாரிக்கும், மாகேஸ்வரர்க்கும், பிராமணர்க்கும். திருநொந்தாவிளக்கு எட்டினுக்கும் ஆகப் பதினான்கு வேலி நிலத்தைத் திருவிடைமருதில் நகரத்தாரிடையும், திரைமூர்ச்சபையாரிடையும் முதற் பராந்தக சோழனது முப்பத்தைந்தாம் ஆண்டில் அதாவது கி.பி. 942இல் விலைக்கு வாங்கி அளித்துள்ளான். கிழக்கெல்லை வண்ணக்குடியார் பிணம்போகும் வழிக்கு மேற்கு, தென் எல்லை பெருவழிக்கும் வண்ணக்குடி வாய்க்காலுக்கும் வடக்கு, மேற்கெல்லை பழங்காவிரிக்குக் கிழக்கு, வட வெல்லை பழங்காவிரிக்கும் குடந்தையார் நிலத்திற்கும் தெற்கு ஆக இசைந்த பெருநான்கெல்லையுள் அகப்பட்டதாகும். செம்பியன் தமிழவேளான் மூலத்தான மகாதேவர்க்கு நொந்தா விளக்கு ஒன்றை வைத்துள்ளான். வெண்ணாட்டு வரம்பூசலுடையான் சந்திராதித்தன் சத்துருகண்டன் 'திருவிடைமருதுடையார் சாலை' உண்ணும் பிராமணர்க்குத் தாலம் பதினெட்டு, சட்டுவம் ஒன்று இவைகளை இட்டுள்ளான். இவை முறையே நூற்றைம்பத்திரண்டு பலங்களும், ஐந்து பலங்களும் நிறையுள்ளன.
|