பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பன்மர் காலத்தில் விடப்பட்ட நிவந்தங்கள்:- தைப்பூசத் திருநாளில் தீர்த்தம் ஆடின பிற்றை நாள் தொடங்கி மூன்றுநாள் கூத்து ஆடுவதற்கும், வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்றுநாள் கூத்து ஆடுவதற்கும் ஏழு அங்கங்களைக் கொண்டுள்ள இந்தப் பழைய ஆரியக்கூத்தில் வல்லவனாகிய கீர்த்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கனுக்கு விளங்குடிநிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட வேலி நிலத்தை திரைமூர்நாடு உடையாரும், திருவிடைமருதில் நகரத்தாரும், கோயில் ஸ்ரீ காரியம் ஆராய்கின்றவரும் கொடுத்துள்ளனர். கோராசகேசரிபன்மர் காலத்தில் அளிக்கப்பெற்றுள்ள நிவந்தம்:- ஆனைமேல் துஞ்சின உடையாரின் தாயாருடைய பரிவாரத்துப் பெண்டாட்டி பொதுவன் சிற்றடி திருவிடைமருதில் ஆள்வார்க்குத் திருவிளக்கினுக்கு ஈழக்காசு இருபதினால் பொன் பதின்கழஞ்சையும், திருவிடைமருதுடையார் அமுது செய தண்ணீர் அமுது வட்டில் ஒன்று இருபத்துநான்கு கழஞ்சு நிறை உள்ளதையும் அளித்துள்ளனர். கவரிப்பிணாக்களுக்குத் திவசம்முந்நாழி நெல் பெறுவதற்கு தேவதானம் விளங்குடி பாட்டத்தில் அறுபது நீக்கி நின்ற நிலத்தில் வந்த நெல்லுப்பெறுமாறு கோயிலார் ஏற்பாடு செய்து அதைக் கல்லில் வெட்டுவித்துள்ளனர். அக் கவரிப்பிணாக்களில் ஒருவர் பெயர் மழுபாடி மருதி என்பதாகும். விக்கிரமசோழன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிவந்தம்:- திருவிடைமருதூர் திருக்கற்றளியில் மாணிக்கக் கூத்தற்கு அமாவாசை தோறும் திருவமுது உள்ளிட்டு வேண்டுவனவற்றிற்கும் கட்டுச் சோற்றுக்கும் அமாவாசை ஒன்றுக்கு நெல் ஐங்குறுணி இருநாழியாக ஓராண்டுக்கு வேண்டும் நெல் ஐங்கலனேமுக்குறுணியும், தேவர் கடமைக்கு ஐங்கலனேமுக்குணியும் ஆக நெல் பதின்கலனே தூணிப்பதக்குக்குத் திருவிடைமருதூரில் சதாசிவன் மகிக்கல் என்னும் பெயருள்ள நூற்று எழுபத்தைந்துகுழி நிலத்தை அரிகுலராஜமாராயன் வாங்கிக் கொடுத்துள்ளான். விட்டலதேவ மகாராயர் அளித்த நிவந்தம்:- வீரப்பிரதாப ஸ்ரீமான் மகாமண்டலேசுவர இராமராச விட்டலதேவ மகாராசர் புத்தாற்றுக்கு வடக்கு ஆவணம், சிற்றாடி என்னும் இரு ஊர்களைத் திருவிடைமருதூர்ச் சிவபெருமானுக்குத் தருமசிலாசாசனம் செய்து கொடுத்துள்ளார்.
|