இவைபோன்று இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் பலவாகும். 13. திருஇன்னம்பர் இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் பெருவழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களுள் 45 ஆவது தலம். இறைவரின் திருப்பெயர்:- (1) தான் தோன்றியீசர் (2) எழுத்தறிந்த நாதர். இப்பெயர், அப்பர்பெருமானால் இவ்வூர்ப்பதிகத்தில் எடுத்து ஆளப் பெற்றுள்ளது. இறைவியின் திருப்பெயர் - கொந்தார் பூங்குழல் அம்மை. தீர்த்தம் - ஐராவத தீர்த்தம். ஞாயிறு, அகத்தியர், ஐராவதம் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இப்பதிக்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் நான்கு என ஐந்து பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு: இத்திருக்கோயிலில் சோழ மன்னரில் இராஜகேசரி வர்மரின் நான்காம் ஆண்டிலும், விஜயநகர வேந்தரில் வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் சோழமன்னரில் கல்வெட்டு, அரிஞ்சிகை விண்ணகரம் என்னும் திருமால்கோயில் இன்னம்பரில் இருந்த தென்னவன் விழுப்பரையனுடைய மனைவி அரிஞ்சிகையால் ஐந்து அந்தணர்களுக்கு அன்னமளிக்க நிபந்தம் அளித்ததைக் கூறுகின்றன. வீரகம் பண்ண உடையார் கல்வெட்டு, துருக்கர் படையெடுப்பால் நாற்பது ஆண்டுகள் இக்கோயில் பூசையின்றிக் கிடந்ததையும் குறிப்பிடுகின்றது. மேற்குறித்த சோழர் கல்வெட்டு இவ்வூரை வடகரை இன்னம்பர் நாட்டு இன்னம்பர் என்று குறிப்பிடுகின்றது. 14. திருஎறும்பியூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பியூர் (திருவரம்பூர்) தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே 1கி.மீ தொலைவில் உள்ளது.
|